Published : 01 Oct 2017 12:12 PM
Last Updated : 01 Oct 2017 12:12 PM

காஷ்மீரின் மிக உயர்ந்த பனிமலையில் பாலத்தை திறந்து வைத்தார் நிர்மலா சீதாராமன்: எல்லையில் தளபதியுடன் நேரில் ஆய்வு

காஷ்மீரின் மிக உயர்ந்த லே பகுதியில் கட்டப்பட்ட பாலத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று திறந்து வைத்தார்.

காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்ய, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 நாள் பயணமாக நேற்றுமுன்தினம் ஸ்ரீநகர் வந்தடைந்தார். இந்நிலையில், மிக உயர்ந்த லே பகுதியில் கட்டப்பட்ட பிரதாம் - ஷியோக் பாலத்தை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று திறந்து வைத்தார். இந்தப் பாலம் லே பகுதியையும் காரகோரம் பகுதியையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.பாலத்தைத் திறந்து வைத்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

காஷ்மீரின் மிக உயர்ந்த பகுதியில் இதுபோல் பாலம் கட்டியது அதிசயமானதுதான். பல்வேறு சீதோஷ்ண நிலைகள் உள்ள பல மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள், குளிர் நிறைந்த இதுபோன்ற இடங்களில் பணியாற்றுவது பெரும் பாராட்டலுக்கு உரியது. எல்லா சூழ்நிலைகளிலும் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு மத்திய அரசும் பிரதமர் மோடியும் எப்போதும் ஆதரவாக இருக்கிறார்.

இந்தப் புதிய பாலம் பொதுமக்களின் போக்குவரத்துக்கும் ராணுவ தளவாடங்கள் போக்குவரத்துக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடினமான மலைப் பகுதியில் சிறந்த பாலத்தை கட்டி முடித்த எல்லை சாலை அமைப்பு (பிஆர்ஓ) அதிகாரிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

அமைச்சர் நிர்மலா சீதாராமன், வடக்கு காஷ்மீர் குப்வாரா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே சென்று பாதுகாப்பு நிலவரங்களை ஆய்வு செய்தார். அவருடன் ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் இருந்தனர். எல்லையில் ஊடுருவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உட்பட பல்வேறு முக்கிய ராணுவ நடவடிக்கைகள் குறித்து அமைச்சருக்கு அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.

காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். அப்போது மாநிலத்தில் பாதுகாப்பு சூழ்நிலைகள் குறித்து விரிவாக இருவரும் ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோராவையும் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x