Published : 01 Apr 2014 11:38 AM
Last Updated : 01 Apr 2014 11:38 AM

மூவரில் ஒருவர் தான் மோடி: அத்வானி பேச்சு

தொடர்ந்து மூன்று முறை தேர்தல் வெற்றி கண்டவர் நரேந்திர மோடி மட்டுமல்ல என அத்வானி தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி மக்களவை தேர்தலுக்கான தனது முதல் பிரச்சாரத்தை மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் நேற்று (திங்கள் கிழமை) துவக்கினார்.

அப்போது பேசிய அத்வானி, "தொடர்ந்து மூன்று முறை தேர்தல் வெற்றி கண்டவர் நரேந்திர மோடி மட்டுமல்ல. சத்தீஸ்கரின் ராமன் சிங்கும், மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகானும் தொடர்ந்து மும்முறை வெற்றி பெற்றுள்ளனர். எனவே மோடி மூவரில் ஒருவர் தான்" என்றார்.

பாஜகவில் அத்வானிக்கு முன்பிருந்த செல்வாக்கு இப்போது இல்லை எனக்கூறப்படும் நிலையில், அவர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு மகாராஷ்டிரா மாநில பாஜக முக்கிய புள்ளிகள் யாரும் வரவில்லை.

இத்தகைய நிலையில், பொதுக்கூட்டத்தில் மோடி மட்டுமே தேர்தலில் ஹேட்ரிக் வெற்றி கண்டவர் இல்லை என விமர்சித்தாலும், தனது பேச்சுகள் நிச்சயமாக கூர்ந்து கவனிக்கப்படும் என்று யூகித்த அத்வானி, மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமையும் என்று கூறியதோடு, அவரது ஆட்சி இந்தியாவை மாற்றி அமைக்கும் என்றார்.

1990-களில் தான் மேற்கொண்ட ரதயாத்திரையில் மோடி தன்னுடன் இணைந்து செயல்பட்டதாக அத்வானி நினைவு கூர்ந்தார்.

வாஜ்பாயின் நிர்வாகத் திறனை புகழ்ந்து பேசிய அத்வானி, மன்மோகன் சிங் ஒரு சக்தி வாய்ந்த பதவியில் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாதபடி இருந்தார் என்றார்.

பாஜக ஆட்சியில் மூன்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அத்வானி, தெலங்கானா அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள், குளறுபடிகள் போல் ஏதும் ஏற்படவில்லை என்றார்.

மேலும் பாஜக ஆட்சியில் பணவீக்கம் எப்போதும் கட்டுக்குள் இருந்தது என்றார். வாஜ்பாய் பிரதமராக இருக்க இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்குமானால், அவர் நிச்சயம் நதிநீர் இணைப்பை செயல்படுத்தியிருப்பார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x