Published : 22 Oct 2017 11:17 AM
Last Updated : 22 Oct 2017 11:17 AM

காஷ்மீரில் தீவிரவாதம் வளர சமூக ஊடகங்களே காரணம்: ராணுவ தளபதி பிபின் ராவத் குற்றச்சாட்டு

ஜம்மு காஷ்மீர் மாநில இளைஞர்கள் மத்தியில் தீவிரவாதம் வளர சமூக ஊடகங்களே காரணம் என ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் குற்றம்சாட்டி உள்ளார்.

ஜம்முவில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ராணுவ தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:

உலகம் முழுவதும் தீவிரவாதம் வேகமாக வளர்கிறது. காஷ்மீரிலும் குறிப்பாக இளைஞர்கள் தீவிரவாத பாதைக்கு செல்வது அதிகரித்து வருகிறது. இதற்கு சமூக ஊடகங்கள் முக்கிய காரணமாக விளங்குகின்றன. இதனால் மாநில அரசு, காவல் துறை உட்பட அனைத்து தரப்பினரும் கவலை அடைந்துள்ளனர்.

எனவே, தீவிரவாதம் வளர்வதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இளைஞர்கள் தீவிரவாத பாதைக்கு செல்வதைத் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

காஷ்மீரிலும் மர்ம நபர்கள் பெண்களின் கூந்தலை அவர்களுக்கு தெரியாமல் வெட்டி விடும் சம்பவம் நடந்து வருகிறது. இதனால் சில இடங்களில் வன்முறை சம்பவம் நடந்துள்ளது. பிற மாநிலங்களைப் போல நடைபெறும் சம்பவம்தான் இது. இதை பெரிய சவாலாக கருதவில்லை. இந்த விவகாரத்தைத் தடுக்க மாநில அரசும் காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு பிபின் ராவத் தெரிவித்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x