

ரயில்வே பட்ஜெட் தொடர்பாக மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர்.
மக்களவையில் ஆளும் பாஜக உறுப்பினர்களுக்கும் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ரயில்வே பட்ஜெட்டில் மேற்கு வங்கம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகக் கூறி மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அவர்களுக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.
இரு கட்சிகளின் உறுப்பினர் களும் அவையின் மையப் பகுதியில் கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 3.30 மணிக்கு மக்களவை கூடியபோது இரு கட்சிகளின் உறுப்பினர்களுக்கு இடையே மீண்டும் மோதல் மூண்டது. பாஜக உறுப்பினர்களை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு சமாதானப்படுத்தினார்.
இருப்பினும் அமளி அதிகமானதால் அப்போது அவையை நடத்திய ஹம்கா தேவ் நாராயண் யாதவ் மக்களவையை ஒத்திவைத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கல்யாண் பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவையில் பாஜக உறுப்பினர்கள் தங்களை தகாத வார்த்தைகளால் கூறி தாக்க வந்ததாக திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த ககோலி கோஷ் எம்.பி. குற்றம் சாட்டினார்.
மாநிலங்களவையில் அமளி
மாநிலங்களவையில் ரயில்வே பட்ஜெட் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவை பிற்பகல் 2 மணிக்கு கூடியதும் அமைச்சர் சதானந்தா கவுடா அந்த அவையில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் மதுசூதனன் மிஸ்திரி எழுந்து, ரயில்வே பட்ஜெட் விவரங்கள் ஒரு நாளிதழில் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இது அவை உரிமை மீறல் ஆகும் என்று குற்றம் சாட்டினார்.
அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து குறிப்பிட்ட நாளிதழின் பிரதியைக் காட்டி அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்.
அவையை நடத்திய பி.ஜே.குரியன், அவை உரிமை மீறல் தொடர்பாக நோட்டீஸ் அளிக்கலாம் என்று மதுசூதனன் மிஸ்திரியிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.