

புதுடெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளுக்கான குடிமைப் பணி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற 3 பிரிவுகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
இதன்படி கடந்த மே 28-ம் தேதி நாடு முழுவதும் முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 11.52 லட்சம் பேர் எழுதினர். இதைத் தொடர்ந்து நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 14,624 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான பிரதான தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். பிரதான தேர்வில் தேர்ச்சி பெறுவோர் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இதன்பிறகு இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.