டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் மீண்டும் சுணக்கம்

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் மீண்டும் சுணக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் பல வருடங்களாக தமிழுக்கானப் பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு தமிழ் மொழியில் இளங்கலை, முதுகலை மற்றும் பட்டயப் படிப்புக்கான கல்வி போதிக்கப்படுகிறது. இதற்கான 5-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பேராசிரியர்கள் ஓய்வுபெற்ற பிறகும் அப்பணியிடங்கள் 10 வருடங்களாக காலியாக இருந்தன.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியாகி வந்தது. கடைசியாக கடந்த வருடம் டிசம்பர் 20-ல் வெளியான செய்திக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும், மத்திய கல்வி அமைச்சருக்கும், டெல்லி பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் கடிதம் எழுதினர்.

அதன்பின் தமிழ்ப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவும் முறையாக செயல்படாமல் உள்ளது.

இதற்கிடையில், ஒரு உதவிப் பேராசிரியர் பணி பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், விண்ணப்பம் அளித்த 14 பேரில் ஒருவருக்கு மட்டும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 2 இணைப் பேராசிரியர் பணிக்கான விண்ணப்பதாரர்களுக்கு இன்னும் நேர்முகத் தேர்வு அழைப்பு அனுப்பப்படவில்லை.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் டெல்லி பல்கலைக்கழக நிர்வாக வட்டாரம் கூறும்போது, “தமிழுக்கான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் குறைவாக சேருகின்றனர். அதை காரணம் காட்டி 2 இணைப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்தப் பல்கலையின் உறுப்புக் கல்லூரிகளில் மகளிருக்கான மிராண்டா அவுஸ், லேடிராம் மற்றும் சில கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்கள் நியமிக்க இன்னும் அறிவிப்புகளே வெளியாகவில்லை” என்று தெரி வித்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் டெல்லி பல்கலைக்கழகத்தின் திறந்தவெளிப் பள்ளிக்கு பேராசிரியர்கள் நியமிக்கும் அறிவிப்பு வெளியானது. அதில் தமிழுக்கானப் பணியிடம் இடம்பெறவில்லை. இங்கு கடைசியாக பணியாற்றிய உதவிப் பேராசிரியர் மாணிக்கவாசகம் கடந்த வருடம் பிப்ரவரியில் ஓய்வுபெற்றார். இதனால் அவரது இடமும் காலியாக உள்ளது.

இதனிடையே, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அமலால் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்படி அறிமுகமாகி உள்ள 4 வருட பட்டப்படிப்பின் ஒவ்வொருவருடமும் மாணவர்கள் ஏதாவது ஒரு மொழியை பயில்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த வருடம் 4 வருட பட்டப்படிப்பின் முதலாண்டு மாணவர்களுக்கு மொழிப் பாடமாகத் தமிழ் இருந்தது.

எனினும், இந்த மாணவர்களின் வகுப்புகளை ‘க்ளஸ்டர்’ முறையில் பகுதிநேர தமிழ்ப் பேராசிரியர்களை கொண்டு சமாளிப்பதாக புகார் உள்ளது. இந்த சிக்கல், இதர தென்னிந்திய மொழிகளுக்கும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in