

ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தில் 220 மாத பாஜக ஆட்சியில் 225 ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஜபல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
மத்திய பிரதேசத்தில் பாஜக 220 மாதங்களாக ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சியில் இதுவரை, வியாபம், ரேஷன் விநியோகம் உட்பட 225 ஊழல்கள் நடைபெற்றுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் 21 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல் எனக்கு கிடைத்த பிறகு 3 முறை அதை சரிபார்த்ததில் உண்மை என தெரியவந்துள்ளது.
சவுகான் ஆட்சியின் மோசமான நிர்வாகத்தால் கடவுள்களும் தப்பவில்லை. கடந்த மே 28-ம் தேதி வீசிய சூறாவளி காற்றால் உஜ்ஜயினி மகாகாலேஸ்வர் கோயிலில் 6 சிலைகள் சேதமடைந்துள்ளன.
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி நடைபெற்றால் (இரட்டை இன்ஜின் அரசு) மக்கள் பயனடைவார்கள் என பாஜகவினர் கூறி வருகின்றனர். நாங்கள் இரட்டை மற்றும் மூன்று இன்ஜின் ஆட்சியையும் பார்த்துவிட்டோம். ஆனால் இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடக மக்கள் தேர்தலில் பாஜகவுக்கு தக்க பாடம் கற்பித்துள்ளார்கள். இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
சிலர் பதவி ஆசைக்காக வேறு கட்சிக்கு தாவி விட்டனர் என ஜோதிராதித்ய சிந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் சாடினார் பிரியங்கா காந்தி. கடந்த 2018-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கமல்நாத் தலைமையில் அரசு அமைந்தது. இந்நிலையில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கமல்நாத்துக்கு எதிராக ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான சிலஎம்எம்எல்ஏ-க்கள் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் கமல்நாத் அரசு கவிழ்ந்து, மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது.