

பெங்களூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள கேரள மக்கள் ஜன நாயக கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மதானிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி யதையடுத்து திங்கள்கிழமை இரவு பெங்களூர் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த அப்துல் நாஸர் மதானி 1998-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற வெடிகுண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏறக்குறைய 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப் பட்டார். 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி வழக்கில் இருந்து நிரபராதியாக விடுவிக்கப்பட்டார்.
பெங்களூர் வெடிகுண்டு வழக்கு
2008 ஜூலை 25-ம் தேதி பெங்க ளூரில் 8 இடங்களில் தொடர்ந்து குண்டு வெடித்தது. இதில் ஒரு பெண் பலியானார். 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு போலீ ஸார் கோவை வெடிகுண்டு வழக் கில் தொடர்புடைய மதானிக்கு தொடர்பிருப்பதாக கூறினர்.
2007-ம் ஆண்டின் இறுதியில் கர்நாடக மாநிலம் குடகில் நடை பெற்ற கூட்டத்தில் மதானி கலந்து கொண்டு பேசினார். அவருடைய சர்ச்சைக்குரிய பேச்சே பெங்க ளூர் குண்டு வெடிப்பிற்கு முக்கிய காரணம் என கூறி இவ்வழக்கில் மதானியை 31-வது குற்றவாளியாக சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி கேரளாவில் கைது செய்யப்பட்டு பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹரா மத்திய சிறையில் இருந்த மதானி நீரிழிவு நோய், இதய கோளாறு உள்ளிட்ட பல நோய்களால் கடுமையாக பாதிக் கப்பட்டார். எனவே மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மூன்று மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மதானி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை மதானிக்கு ஒரு மாத காலம் நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
நீதித்துறையின் மீது நம்பிக்கை
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து 3 நாட்களுக்கு பிறகு மதானி கடந்த திங்கள்கிழமை இரவு பெங்களூர் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த மதானி பேசுகையில், “என் மீது எந்த தவறும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் மீது எனக்கு இன்னும் அசாத்தியமான நம்பிக்கை இருக்கிறது. எனவே என் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்து விரைவில் வெளியே வருவேன்'' என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.