Published : 12 Jun 2023 03:44 PM
Last Updated : 12 Jun 2023 03:44 PM

‘கோவின்’ தகவல்கள் கசிவு | மோடி அரசின் மிகப் பெரிய தரவு மீறல்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி: மூத்த அரசியல்வாதிகள் உள்பட கோவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைத்து இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களும் இணையத்தில் இலவசமாகக் கிடைப்பதாக திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இது குறித்து திரிணமூல் காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே தனது ட்விட்டர் பக்கத்தில் சில ஸ்கிரீன் ஷாட்டுக்களைச் பகிர்ந்து நீண்டதொரு பதிவிட்டுள்ளார். அதில், "மோடி அரசில் மிகப் பெரிய அளவில் தரவு மீறல்கள் நடந்துள்ளன. கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைத்து இந்தியர்களின் மொபைல் எண், ஆதார் எண், பாஸ்போர்ட் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், குடும்ப உறுப்பினர்கள் விவரம் உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட தரவுகளும் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. இது தேசிய அளவில் மிகவும் கவலையளிக்கக் கூட ஒன்று" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெர்க் ஓ பிரைன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷன், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிபன்ஷ் நாராயன் சிங், மாநிலங்களவை உறுப்பினர்கள் சுஷ்மிதா தேவ், அபிஷேக் மனு சிங்வி, ரஞ்சய் ராவத் ஆகியோர்களின் தகவல்களுடன் சில ஊடகவியளார்களின் தனித் தகவல்கள் அடங்கிய ஸ்க்ரீன் ஷாட்டுகளை பகிர்ந்து எழுப்பிய கேள்விகள்:

> மோடி அரசு பலமான தரவுகள் பாதுகாப்பினை பின்பற்றுகிறது எனக் கூறிவரும் நிலையில், கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் தனிப்பட்ட தகவல்கள் எப்படி வெளியே கசிந்தன?

> உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட மோடி அரசுக்கு இந்தத் தகவல் கசிவு குறித்து ஏன் எதுவும் தெரியவில்லை. மேலும், இது குறித்து மக்களுக்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை?

> ஆதார், பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தனிப்பட்ட தகவல்களை கையாளும் உரிமையை மோடி அரசு யாருக்கு வழங்கியது?

> இதற்கு பொறுப்பான மின்னணு தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவின் திறமையின்மை மோடி அரசால் இன்னும் எவ்வளவு காலத்துக்கு புறக்கணிக்கப்படும்?

கார்த்திக் சிதம்பரம் கேள்வி: கோவின் தனித் தரவுகள் கசிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கார்த்திக் சிதம்பரம், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தனது டிஜிட்டல் இந்தியா வெறியில், இந்திய அரசானது நாட்டு மக்களின் தனியுரிமைகளை மறந்துவிட்டது. கோவிட் 19 தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஒவ்வொரு இந்தியரின் தனிப்பட்ட தகவல்களும் பொதுவெளியில் காணக்கிடைக்கின்றன. இவ்வாறு நடக்க யார் அனுமதித்தது? இந்திய அரசு எதற்காக தகவல் பாதுகாப்புச் சட்டத்தை வைத்துள்ளது? மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

சுப்ரியா சுலே கேள்வி: "இந்தச் செய்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது மிகவும் கவலைக்குரிய ஒன்று மட்டும் இல்லை, ஏற்றுக்கொள்ள முடியாததும் கூட! அரசு உடனடியாக இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இந்த மீறலுக்கு காரணமானவர்கள் கண்டறிந்து, அதற்கு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்" என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கவில்லை: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அரசுத் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், கோவிட் 19 தடுப்பூசி பதிவுத் தளமான கோவின் தளத்தில் ஒருவரின் பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவின் தளத்தில், ஒருவர் முதல் தவணை, இரண்டாவது தவணை, முன்னெச்சரிக்கைத் தவணை தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட தேதிகள் மட்டுமே சேகரிக்கப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய சுகாதாரத் துறை கோவின் தரவுகள் கசிந்தது தொடர்பாக விரிவான அறிக்கைகள் தயார் செய்து வருகிறது. அது குறித்த தகவல்கள் ஆராயப்பட்டு வருகிறது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

— Saket Gokhale (@SaketGokhale) June 12, 2023

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x