

பதவியேற்ற ஒரே மாதத்தில் அரசை குறை சொல்லக்கூடாது என்றும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த சிறிது கால அவகாசம் தேவை என்றும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விலைவாசி குறித்த விமர்சனங்களை முன்வைத்து அவையில் அமளியில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, "ஆட்சி அமைத்து ஒரு மாதமே ஆன நிலையில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவில்லை என்று கூறக் கூடாது.
நாங்கள், எங்களுடைய கொள்கை ரீதியிலான எந்த நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்காத நிலையில், விலைவாசி உயர்வுக்கு எப்படி பொறுப்பேற்க முடியும்?
மழைக்காலக் கூட்டத் தொடர், பொருளாதார கொள்கை என எதிலும் முந்தைய அரசு பிரச்சினைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சருடன் மத்திய நிதியமைச்சர், ஒருங்கிணைந்த கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர். வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய பொருட்களின் பதுக்கலை தடுக்க, டெல்லியில் அனைத்து முயற்சிகளையும் உள்துறை அமைச்சகம் எடுத்து வருகின்றது. மாநிலங்களில் இதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதற்கான துறை அதிகாரிகளிடம் விவாதிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு குறித்து நாங்கள் எதிர்க்கட்சியினருடன் விவாதிக்க தயாராக உள்ளோம். இன்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, விலைவாசி உயர்வு குறித்த கேள்விகளை எழுப்ப நாங்கள் அனுமதித்தோம். ஆனால், எதிர்க்கட்சிகள் அதுவரை அமளியில் ஈடுபட்டுவிட்டு, கேள்வி நேரம் முடிந்தவுடன் விவாதிக்க அனுமதிக்கவில்லை எனக் கூறினர். காங்கிரஸ் உறுப்பினர்கள் விவாதத்திற்கு தயாராக வேணடும். ஆனால், அவர்கள் ஏன் தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.
நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்துடனே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. அனைவருக்கும் அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன" என்றார் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு.