Last Updated : 04 Oct, 2017 04:28 PM

 

Published : 04 Oct 2017 04:28 PM
Last Updated : 04 Oct 2017 04:28 PM

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தொடர் சம்மன்கள்: சட்டவிரோதமானது என்கிறார் கார்த்தி சிதம்பரம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிபிஐ தன்னை விசாரணை செய்வதற்காக அனுப்பிய சம்மன்கள் சட்ட விரோதமானவை, தன்னையும் தன் குடும்பத்தினரையும் துன்புறுத்துவதற்காகவே இது மேற்கொள்ளப்பட்டது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மேலும் தன் வழக்கறிஞர் அருண் நடராஜன் மூலம் விசாரணைக்கு தன்னை ஆஜராகும் படி வற்புறுத்த வேண்டாம் என்று சிபிஐ-யிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதன் கிழமையன்று ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்தே கார்த்தி சிதம்பரம் இவ்வாறு தெரிவித்தார்.

இதனையடுத்து, “நடப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் சிபிஐ மற்றும் பிற விசாரணைப் பிரிவுகள், அவ்வப்போது அவதூறாக செய்தி அறிக்கைகள் வெளீயிடுவதும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக சில வலுக்கட்டாய நடவடிக்கைகளையும் எடுத்து எனது கட்சிக்காரர் (கார்த்தி) மற்றும் அவரது குடும்பத்தினரின் கவுரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் வெளிப்படையாக பரபரப்பாக்கி வருகிறது” என்று கூறி தன் கட்சிக்காரர் நேரடியாக ஆஜராகக் கோரக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார் கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர்.

மேலும், தனக்கு சம்மன் அளிப்பதற்கு எதிராக கார்த்தி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவும் தாக்கல் செய்துள்ளதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிக்கப்பட்டன, இதில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். எனவே சிபிஐ நோட்டீஸ்கள் அனுப்பியிருக்கக் கூடாது என்று வழக்கறிஞர் மீண்டும் ஒரு முறை வலியுறுத்தியுள்ளார்.

எனவே “இப்போது அனுப்பிய நோட்டீஸ், சட்ட விரோதமானது, வஞ்சகமானது மேலும் என் கட்சிக்காரர் மற்றும அவரது குடும்பத்தினருக்கு உளைச்சல் தருவதாகும்” என்று கூறினார் அவர்.

கடந்த முறை செப்டம்பரில் கார்த்தி சிபிஐ முன் நேரில் ஆஜராக மறுத்த போது, குற்றம்சாட்டப்பட்ட 8 பேரில் 4 பேர்தான் விடுவிக்கப்பட்டார் என்றும் அதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறி கார்த்தி சிதம்பரத்தின் கோரலை மறுத்தது.

இது குறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயால் கூறும்போது, “FIR RC—22(A)/2011—DLI கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்படவில்லை, மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சிபிஐயினால் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட இரண்டு மலேசிய நிறுவனங்கள் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த இருவரும் சிறப்பு நீதிமன்றத்தின் முன் ஆஜரகாவில்லை, இவர்களுக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற நடைமுறைகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. இரண்டு மலேசியா நாட்டுக்காரர்களுக்கு எதிராக ரெட் நோட்டீஸ் அனுப்புவதற்கு இண்டர்போலின் முன் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக குளோபல் கம்யூனிகேஷ் நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு அனுமதி அளித்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக விசாரணை இன்னமும் தொடர்கிறது என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கார்த்தி சிதம்பரம் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் நிறுவனங்கள் ஏர்செல் நிறுவனத்தில் செய்த முதலீடுகளையும் சிபிஐ தன் பார்வையின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x