Last Updated : 04 Oct, 2017 07:51 PM

 

Published : 04 Oct 2017 07:51 PM
Last Updated : 04 Oct 2017 07:51 PM

பொருளாதார வளர்ச்சி முதல் முறையாக 5.7% ஆகக் குறைந்ததா? விமர்சகர்களுக்கு பிரதமர் மோடி கேள்வி

பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.7% ஆகக் குறைந்தது பற்றி பிரதமர் மோடி தலைமை பாஜக ஆட்சி மீது கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து ‘இப்போதுதான் முதல் முறையாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7% ஆகக் குறைந்துள்ளதா?’ என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய நிறுவனச் செயலாளர்கள் கழகம் தனது கோல்டன் ஜூப்ளி ஆண்டைக் கொண்டாடும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது, அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மீண்டும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியே என்று கூறி விமர்சகர்களைச் சாடினார்.

பொருளாதார வளர்ச்சி குறைவு குறித்து..

“சிலர் அவநம்பிக்கையை பரப்புவதில் மகிழ்கின்றனர், இதன் பிறகே அவர்கள் இரவில் நன்றாக உறங்குவார்கள். ஒரு காலாண்டில் வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது அவர்களுக்கு இருண்ட காலமாகத் தெரிகிறது. இப்போதுதான் முதன் முதலாக வளர்ச்சி விகிதம் 5.7%ஆகக் குறைந்ததா?

முந்தைய ஆட்சியில் வளர்ச்சி விகிதம் 5.7% அல்லது அதற்கும் குறைவாக வீழ்ச்சியடைந்த 6 தருணங்களைக் காட்ட முடியும்.

சில காலாண்டுகளில் வளர்ச்சி விகிதம் 0.2% அல்லது 1% ஆகவும் இருந்துள்ளது. அதிக பணவீக்க விகிதம் மற்றும் பற்றாக்குறைகள் ஆகியவற்றுடன் வளர்ச்சி விகிதமும் குன்றியது இன்னமும் அபாயம் அல்லவா.

சிஎஸ்ஓ இதற்கு முன்பு 7.4% வளர்ச்சி விகிதம் என்று அதிகாரபூர்வ தரவை அளித்த போது இதே விமர்சகர்கள் அப்படித்தெரியவில்லை என்று விமர்சித்தனர். கடந்த 2 காலாண்டில் வளர்ச்சி விகிதம் 6.1%, 5.7% ஆகக் குறைந்தவுடன் இவர்கள் உடனடியாக தரவுகளைக் காதலிக்கத் தொடங்கி விட்டனர்.

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ஜிடிபிக்கு ரொக்க விகிதம் 9% ஆகக் குறைந்தது, நவம்பர் 8ம் தேதிக்கு முன்பாக இது 12% ஆக இருந்தது, குறைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 8-ம் தேதி ஊழலுக்கு எதிராக போர் தொடுத்த நாள் என்றே வரலாற்றில் அறியப்படும். பணமதிப்பு நீக்கம் என்ற தைரியமான முடிவை இந்த அரசே எடுக்க முடியும்.

நான் பொருளாதார நிபுணரும் அல்ல அவ்வாறு நான் கூறிக்கொண்டதும் இல்லை. இந்தியா முதலில் பலவீனமான 5 பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்தது. என்னைப்போன்ற பொருளாதார நிபுணராக இல்லாதவர் கூட பொருளாதார நிபுணரின் ஆட்சியில் இது எப்படி நடந்தது என்று ஆச்சரியமடைந்தனர்.

ஜிஎஸ்டி....

ஜிஎஸ்டி அறிமுகமாகி 3 மாதங்களுக்குப் பிறகு எங்களுக்கு அதுபற்றிய பின்னூட்டங்கள் வருகின்றன. நான் ஜிஎஸ்டி கவுன்சிலிடம் அனைத்துப் பிரச்சினைகளையும் பரிசீலனை செய்யவும் என்று கூறியுள்ளேன்.

நாடு முழுதும் உள்ள வணிகர்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். நாங்கள் அனைத்தும் தெரிந்தவர்கள் என்று கூறிக்கொள்ளவில்லை. இந்த அரசு உங்கள் பக்கம் உள்ளது. ஜிஎஸ்டி-யை எளிமையாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நல் விளைவுகள்...

ஜூன் மாதத்திலிருந்து வணிக வாகனங்கள் விற்பனை 23%, பயணிகள் வாகன விற்பனை 12%, இருசக்காரவாகன விற்பனை 14% அதிகரித்துள்ளது. இதற்கு என்ன கூறுகிறீர்கள்?

உள்நாட்டு வான்வழிப் போக்குவரத்து 14% அதிகரித்துள்ளது. சரக்கு விமான நடவடிக்கைகளில் 16% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொலைபேசி சந்தாதாரர்கள் எண்ணிக்கை 14% அதிகரிப்பு. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

அன்னிய முதலீடு...

தாராளயமம் 1992-ம் ஆண்டு தொடங்கியது, ஆனால் 2014-17-ல் என்ன நடந்தது என்று பாருங்கள்

- கட்டுமானத் துறையில் 75% அன்னிய நேரடி முதலீடு இந்த 3 ஆண்டுகளில் வந்ததுதான்.

- சுரங்கத் துறையில் 56% அன்னிய நேரடி முதலீடு இந்தக் காலக்கட்டத்தில்தான்.

- கணினி மற்றும் மென்பொருள் துறையில் 53% அன்னிய முதலீடு

- புதுப்பிக்கத்த எரிசக்தி துறையில் 49% அன்னிய முதலீடு

முந்தைய ஆட்சியில் ஜிடிபி-யை விட பணவீக்கம் அதிகமாக இருந்தது, இது அப்போதைய தலைப்புச் செய்தி. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக உள்ளன. சீர்த்திருத்த நடவடிக்கைகள் நிதி ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டு தொடரப்படும்.

இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x