Last Updated : 19 Oct, 2017 03:04 PM

 

Published : 19 Oct 2017 03:04 PM
Last Updated : 19 Oct 2017 03:04 PM

வட இந்தியாவில் இன்று தீபாவளிக் கொண்டாட்டம்

வட மாநிலங்களில் இன்று தீபாவளி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கடந்த செவ்வாய் தொடங்கி ஐந்து நாள் கொண்டாடப்படுவதில் இன்றைய தினம் முக்கிய திருநாள் ஆகும்.

கடந்த செவ்வாய்க்கிழமையான அக்டோபர் 17-ல் துவங்கி வரும் 21 ஆம் தேதி சனிக்கிழமை வரை ஐந்து நாளாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாள் 'தந்தேரஸ்' என அழைக்கப்படும் உலோகத்திருநாள் ஆகும். இந்த நாளில் அனைவரும் கடைகளுக்குச் சென்று தங்கள் வசதிக்கு ஏற்றபடி தங்க நகை முதல் வெள்ளி வரை ஏதாவது ஒரு பொருளை வாங்குவார்கள்.  பிறகு மாலை இதை வீட்டில் வைத்து லக்ஷ்மிதேவியை பூஜித்து ஆராதிப்பார்கள்.

 மறுநாள் கொண்டாட்டம் 'சோட்டி தீபாவளி' (சின்ன தீபாவளி) எனப்படுகிறது. இந்த நாளில், செல்வம் தரும் கடவுளாக இந்துக்கள் கருதும் லக்ஷ்மிதேவி தங்கள் வீட்டிற்குள் நுழைவார் என்பது நம்பிக்கை. அப்போது, வீடுகளில் தீபங்களை ஏற்றி  தேவியை வரவேற்பார்கள்.  இதனால், வட மாநில நகரம் மற்றும் கிராமங்கள் அனைத்திலும் தெருகளில் மின்விளக்குகளால் அலங்கரித்திருப்பார்கள். இந்தக் கொண்டாட்டங்கள், சனிக்கிழமை வரை தொடர்கின்றன.

மூன்றாவது நாளான இன்று வியாழக்கிழமை பெரிய தீபாவளி எனும் முக்கிய நாள் ஆகும். இது, ஐந்து நாள் கொண்டாடப்படும் தீபாவளிப் பருவத்தின் முக்கியமனத் திருநாள். இதில், புத்தாடை உடுத்தி பூஜை செய்து, பட்டாசுகளையும் வெடித்தார்கள். இந்தநாளில், உறவுகள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்குச் சென்று வாழ்த்துகள் கூறி மகிழ்ந்தார்கள். 

நான்காவது தினமான நாளை வெள்ளிக்கிழமை 'கோவர்த்தன் பூஜை' நன்னாள். இதில், பசு மற்றும் காளை மாடுகளை குளிப்பாட்டி, பொட்டிட்டு பூஜை செயவார்கள்.  வியாபார நிறுவனங்கள், கடைகள், கம்பெனிகள், அலுவலகங்களில் பூஜை போட்டு புதிதாகக் கணக்குகளை துவக்குவார்கள்.  உ.பி. மற்றும் உத்தராஞ்சல் மாநிலங்களில் இந்த தினத்தை, ராமர் பெயரில் கொண்டாடுவது வழக்கம். ராவணனிடம் போரிட்டு வென்ற ராமர் அயோத்திக்குத் திரும்பி முடிசூட்டிய நாளாகவும் இது கருதப்படுகிறது. இதற்காக, ராமருக்கும் பூஜைகள் செயயப்படுகின்றன.

விழாவின் கடைசி நாள் 'பைய்யா தோஜ்' எனப்படுகிறது. பைய்யா தோஜில், பெண்கள் தம் சகோதரர்களை சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள். மணமான பெண்கள்கூட தம் குடும்பப் பொறுப்பை தம் கணவன்மார்களிடம் கவலைப்படாமல் ஒப்படைத்துக் கிளம்பி விடுவார்கள். இதனால், சாலைகளில் ஓடும் வாகனங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பெண்கள் கூட்டம் அலைமோதம். இடம் கிடைக்காமல் பேருந்துகளின் மேற்புறங்களிலும் பெண்கள், ஆண்களுக்கு இணையாக ஏறி அமர்ந்து செல்லத் தயங்குவதில்லை. இதற்காக, வட மாநிலங்களின் பெரும்பாலான அரசுகள் மூன்று நாட்கள் அரசு விடுமுறையாக அறிவித்துவிடுவது வழக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x