நடுத்தர மக்களின் வாழ்க்கையை எளிதாக்க அரசு தொடர்ந்து பாடுபடுகிறது: பிரதமர் மோடி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: நடுத்தர மக்களின் வாழ்க்கையை அதிக அளவில் எளிதாக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வளர்ச்சி மற்றும் புதுமைகளுக்கான பங்களிப்பில் நடுத்தர வருவாய் பிரிவினர் முன்னணியில் உள்ளனர். புதிய இந்தியா உருவாகி வருவதை தங்களின் கடின உழைப்பின் மூலம் அவர்கள் உணர்த்தி வருகின்றனர். நடுத்தர வருவாய் பிரிவினரின் வாழ்க்கையை அதிக அளவில் எளிதாக்க மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடு, பிரதமரின் வீடு கட்டும் திட்டம், சிறு நகரங்களிலும் உருவாகி உள்ள விமான நிலையங்கள், ஜிஎஸ்டி மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள விலைவாசி உயர்வு உள்ளிட்ட அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த கட்டுரைகளையும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நடுத்தர வருவாய் பிரிவினரின் கனவுகளை நிறைவேற்றி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நடுத்தர மக்களின் விருப்பங்களை உணர்ந்த அரசாக கடந்த 9 ஆண்டுகால நரேந்திர மோடி அரசு உள்ளது. நடுத்தர மக்களின் குழந்தைகள் கல்வியில் மேம்படுவதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்வி நிறுவனங்களாக இருந்தாலும், மானியத்துடன் வீடு வழங்குவதாக இருந்தாலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக இருந்தாலும் நரேந்திர மோடி, அவர்களின் கனவுகளை நிறைவேற்றி உள்ளார்" என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "ஆண்டு வருவாய் ரூ. 7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பது, மக்கள் மருந்தகம் மூலம் கட்டுப்படியான விலையில் மருந்துப் பொருட்கள் விற்கப்படுவது, சிறு வியாபாரிகளை ஒருங்கிணைக்கும் உதான் திட்டம் ஆகியவை நடுத்தர மக்களுக்கு மிகப் பெரிய பயன்களை அளித்துள்ளது" என்றும் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in