Published : 10 Jun 2023 11:35 AM
Last Updated : 10 Jun 2023 11:35 AM

‘அது ஒரு கொடுங்கனவு...’ - பிரிஜ் பூஷன் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார் குறித்து மனம் திறந்த மல்யுத்த நடுவர்

பிரிஜ் பூஷன் சிங் | கோப்புப்படம்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது முன்னணி இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கூறியிருக்கும் பாலியல் துன்புறுத்தல் புகார்களை சர்வதேச மல்யுத்த நடுவர் ஒருவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மல்யுத்த நடுவரான ஜக்பீர் சிங்,"பிரிஜ் பூஷன் சிங், கடந்த காலங்களில் பல்வேறு தருணங்களில் பெண் வீராங்கனைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கிறார்"என்று தெரிவித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு முதல் சர்வதேச மல்யுத்த விளையாட்டுகளில் நடுவராக இருந்துள்ள ஜக்பீர் சிங், டெல்லி காவல் துறையினரிடமும் மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியுள்ளார்.

புகைப்பட நிகழ்வு: தனியார் செய்திக் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜக்பீர் சிங் பேட்டி அளித்தபோது பிரிஜ் பூஷனின் செயல்களை நினைவுகூர்ந்தார். அவர் கூறுகையில், "கடந்த 2022, மார்ச் 22-ல் லக்னோவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் ட்ரையல்ஸின் போது பிரிஜ் பூஷன் பெண் மல்யுத்த வீராங்கனையிடம் தகாதமுறையில் நடந்து கொண்டார்.

புகைப்படம் எடுக்கும் நிகழ்வின் போது வீராங்கனை ஒருவர் கூட்டமைப்பின் தலைவர் அருகில் நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அந்த வீராங்கனை அசவுகரியமான முகபாவனையை வெளிப்படுத்தினார். அனைவரின் கவனமும் அந்த வீராங்கனையின் மீது திரும்பியது.

அந்த வீராங்கனை தான் நின்ற இடத்தில் இருந்து விலகி, ஒரு கையைத் தள்ளிவிட்டு, முணுமுணுத்த படியே அங்கிருந்து விலகிச் சென்றாள். என்ன நடந்தது என்று நாங்கள் பார்க்கும் போது, பிரிஜ் பூஷன் அந்த வீராங்கனையின் மீது தகாத முறையில் கைகளை வைத்திருந்தார். முதலில் அவ்வீராங்கனை பிரிஜ் பூஷன் அருகில் நின்றிருந்தாள். அதன்பிறகு முன்னாள் சென்று நின்று கொண்டாள். அவள் நடிப்பதாக நான் உணரவில்லை. அவளுக்கு விரும்பத்ததாக செயல் ஏதோ ஒன்று நடந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து சம்பவம்: மேலும், பிரிஜ் பூஷன் மைனர் மல்யுத்த வீராங்கனைகளிடமும் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ள ஜக்பீர் சிங், கடந்த 2013ம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி நிகழ்வினை நினைவுகூர்ந்துள்ளார். அவர் கூறுகையில், அந்தப் போட்டியின் போது, மாமிசம் சாப்பிட்டு பழக்கப்படாத மைனர் பெண்களுக்கு இந்திய உணவுகளை அவர்களின் ஹோட்டல் அறைக்கே கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தார். தாய்லாந்தில் உள்ள அந்த ஹோட்டலில் பிரிஜ் பூஷனின் நண்பர்கள் சிலரும் இருந்தனர். அவர்கள் அந்த சிறுமிகளை தகாதமுறையில் தொட்டுக்கொண்டிருந்தனர். இவை நிகழும் போது நான் அங்கிருந்தேன். அது ஒரு கொடுங்கனவு போல இருந்தது" என்று தெரிவித்தார்.

போராட்டம்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் கடந்த ஏப்ரல் இறுதியில் இருந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்ற அறிவுறுத்தலின் படி பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து பிரிஜ் பூஷனைக் கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பின் போது நாடாளுமன்றம் நோக்கில் பேரணி செல்லவும் முயன்றனர்.

அதன் காரணமாக காவல்துறையின் கைது நடவடிக்கைகளுக்கு ஆளாகினர். அவர்கள் மீது வழக்குகளும் தொடரப்பட்டது. இதனைத்தொடர்ந்து கங்கையில் தங்கள் பதக்கங்களை வீச உள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி மத்திய அரசுக்கு கெடு விதித்தனர்.

ஒத்திவைப்பு: இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, சாக்‌ஷி, வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா சந்தித்தனர். அதன் பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அழைப்பின் பேரில் புதன்கிழமை சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் அவரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஜூன் 15 ம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் மீதான விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து, ஜூன் 15 ம் தேதி வரை தங்களின் போராட்டத்தினை நிறுத்தி வைப்பதாக வீரர்கள் அறிவித்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x