Published : 28 Oct 2017 10:14 AM
Last Updated : 28 Oct 2017 10:14 AM

மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக பத்திரிகையாளர் வினோத் வர்மா கைது

மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக கூறி மூத்த பத்திரிகையாளர் வினோத் வர்மாவை, சத்தீஸ்கர் மாநில போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பிபிசி உட்பட பிரபல செய்தி ஊடகங்களில் பணியாற்றியவர் வினோத் வர்மா. சத்தீஸ்கர் மாநில அமைச்சர் ஒருவருக்கு எதிரான தகவல்களை இவர் திரட்டி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் டெல்லி அருகே, உ.பி.யின் காசியாபாத் நகரில் வினோத் வர்மாவை அவரது வீட்டில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சத்தீஸ்கர் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் சுக்லா கூறும்போது, “மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின் கீழ் வினோத் வர்மா கைது செய்யப்பட்டார். அவரது வீட்டிலிருந்து சுமார் 500 ஆபாச சி.டி.க்கள், ரூ.2 லட்சம், பென்டிரைவ், லேப்டாப், டைரி கைப்பற்றப்பட்டது” என்றார்.

இந்நிலையில் நீதிமன்றம் கொண்டு செல்லப்படும் வழியில் வினோத் வர்மா கூறும்போது, “சத்தீஸ்கர் அமைச்சர் ஒருவரின் ஆபாச வீடியோ என்னிடம் இருப்பது போலீஸாருக்கு பிடிக்கவில்லை. ஒரு பென்டிரைவ் தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை. நான் சி.டி. தயாரிக்கவில்லை. அந்த சி.டி. பொதுவெளியில் உள்ளது” என்றார்.

வினோத் வர்மாவுக்கு எதிராக, சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மாவட்டம், பந்திரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ராய்ப்பூர் டிஎஸ்பி சுக்லா கூறும்போது, “கேட்கும் பணத்தை தராவிட்டால் தனது எஜமானரின் ஆபாச சி.டி.யை வெளியிடுவேன் என மர்ம நபர் மிரட்டுவதாக பிரகாஷ் பஜாஜ் என்பவர் புகாரில் கூறியுள்ளார்.

சி.டி. கடைக்காரரை விசாரித்தபோது, சி.டி.யை வினோத் வர்மா 1,000 பிரதி எடுத்ததாக கூறினார். இதையடுத்து வினோத் வர்மா கைது செய்யப்பட்டார்” என்றார்.

வினோத் வர்மா கைது செய்யப்பட்ட தகவல் பரவியவுடன் பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் காசியாபாத் காவல் நிலையம் முன் திரண்டனர். ஆம் ஆத்மி கட்சி தலைவரும் முன்னாள் பத்திரிகையாளருமான அசுதோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “வினோத் வர்மா மர்மமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x