Published : 09 Jun 2023 06:12 PM
Last Updated : 09 Jun 2023 06:12 PM

பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் கருக்கலைப்பு வழக்கில் ‘மனுஸ்மிருதி’யை குறிப்பிட்ட குஜராத் ஐகோர்ட் நீதிபதி

அகமதாபாத்: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் கருக்கலைப்பு வழக்கில் ‘மனுஸ்மிருதி’யை மேற்கொள் காட்டி குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி 7 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், கருகலைப்புக்கு அனுமதி கோரி சிறுமியின் தந்தை குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சமிர் தாவே, கருக்கலைப்பு தொடர்பாக முடிவு எடுக்கும் முன் சிறுமி மற்றும் அவரது வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் குறித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ராஜ்கோட் மருத்துவமனைக்கு உத்தரவிட்டார்.

மருத்துவ நிபுணர்கள் குழு வரும் 15-ம் தேதிக்குள் இது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, அந்த அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என கூறியுள்ளார்.

இந்த உத்தரவின்போது சில கருத்துக்களை நீதிபதி சமிர் தாவே தெரிவித்தார். "சமஸ்கிருதத்தில் உள்ள சட்ட புத்தகமான மனுஸ்மிருதியில் 14 - 15 வயதில் பெண்களுக்கு திருமணம் நடப்பதும், 17 வயதுக்குள் அவர்கள் தாயாவதும் வழக்கமானதுதான் என அதில் கூறப்பட்டுள்ளது. அதை நீங்கள் படியுங்கள். தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் நன்றாக இல்லாவிட்டால் மட்டுமே கருக்கலைப்புக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கும். இருவரும் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தால் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

ஒருவேளை கருக்கலைப்புக்கு நீதிமன்றம் அனுமதி வழங்காவிட்டால் என்ன செய்வது என்பது குறித்து இப்போதே யோசியுங்கள். குழந்தையை நீங்களே வளர்ப்பதா அல்லது இதற்கென்று அரசு சார்பில் காப்பகம் உள்ளதா என்று விசாரித்து அதில் சேர்ப்பதா என்பது குறித்து முடிவெடுங்கள்" என நீதிபதி தெரிவித்தார். நீதிபதியின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x