Last Updated : 12 Oct, 2017 11:09 AM

 

Published : 12 Oct 2017 11:09 AM
Last Updated : 12 Oct 2017 11:09 AM

டெல்லியில் 29-ம் தேதி மோடி அரசுக்கு எதிராக ஆர்எஸ்எஸ்.ஸின் ஜாக்ரன் மன்ச் கூட்டம்

பிரதமர் மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிராக, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) பிரிவான சுதேசி ஜாக்ரன் மன்ச் சார்பில் டெல்லியில் 29-ம் தேதி எதிர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பு ஆர்எஸ்எஸ். இதன் பிரிவுகள் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்தாலும் அவரது அரசின் கொள்கைகளை எதிர்க்கத் தொடங்கியுள்ளன. கடந்த மாதம் மதுராவில் கூடிய ஆர்எஸ்எஸ் பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளர்கள், மத்திய அரசின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தனர். “வரும் 2019 மக்களவை தேர்தலில் மோடியின் புகழால் மட்டும் பாஜகவுக்கு வெற்றி கிடைக்காது. எனவே மத்திய அரசு தனது கொள்கைகளில் மாற்றம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்திய இவர்கள் அதற்கான போராட்டத்தில் குதிக்கவும் முடிவு செய்தனர்.

இதுகுறித்த விரிவான செய்தி கடந்த மாதம் 15-ம் தேதி ‘தி இந்து’வில் வெளியானது. இதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் பிரிவுகளில் ஒன்றான பாரதிய மஜ்தூர் சங் நவம்பர் 17-ல் மத்திய அரசை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தியது. தற்போது சுதேசி ஜாக்ரன் மன்ச் அமைப்பு, டெல்லி ராம் லீலா மைதானத்தில் 29-ல் போராட்டம் நடத்த உள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் சுதேசி ஜாக்ரன் மன்ச்சின் செய்திப் பிரிவு தலைவர் தீபக் சர்மா கூறும்போது, “அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இந்த எதிர்ப்பு கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும். குறிப்பாக சீனப் பொருட்கள் மற்றும் அந்நாட்டு நிறுவனங்களின் சேவைகளை புறக்கணிக்க வலியுறுத்துவோம். சுதேசிப் பொருட்களை வாங்குவதால் மட்டுமே நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாகும். டெல்லி போராட்டத்துக்கு நாடு முழுவதில் இருந்தும் ஒன்றரை லட்சம் பேர் வருவதாக உறுதி அளித்துள்ளனர்” என்றார்.

இந்த எதிர்ப்பு கூட்டத்தில் பாஜகவின் விவசாயப் பிரிவு உட்பட வேறு பல அமைப்புகளும் பங்கேற்கின்றன. இதன்மூலம் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்க்கும் வர்த்தகம், தொழில் மற்றும் விவசாய அமைப்புகளுக்கு ஒரு வாய்ப்பை தேடித்தருவது சுதேசி ஜாக்ரன் மன்ச்சின் நோக்கமாகும். ஜிஎஸ்டி உட்பட மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து அவற்றில் மாற்றம் கொண்டு வருவதும் இந்தப் போராட்டத்தின் குறிக்கோளாகும்.

ஆர்எஸ்எஸ் பிரிவுகளில் முக்கிய ஒன்றான சுதேசி ஜாக்ரன் மன்ச், பிரதமர் மோடி அரசை எதிர்ப்பது இது முதல் முறையல்ல. மோடி அரசு பதவியேற்ற புதிதில், அவசர சட்டமாக கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை முதல் அமைப்பாக எதிர்த்தது. இதையடுத்து முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெளிநாட்டு தொழில் முதலீட்டு கொள்கையை பிரதமர் மோடி அரசும் பின்பற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x