Published : 08 Jun 2023 07:32 PM
Last Updated : 08 Jun 2023 07:32 PM

நாடாளுமன்றத் திறப்பு விழாவை புறக்கணிப்பது எந்த மாதிரியான அன்பு? - ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இரானி கேள்வி

ஸ்மிருதி இரானி செய்தியாளர் சந்திப்பு

புதுடெல்லி: சொந்த நாட்டின் நாடாளுமன்றத் திறப்பு விழாவை புறக்கணிப்பது எம்மாதிரியான அன்பு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் 9 ஆண்டுகால சாதனையை விவரிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, "சீக்கியர்களை படுகொலை செய்தது எம்மாதிரியான அன்பு? நிலக்கரி ஊழல், மாட்டுத் தீவன ஊழல் போன்றவற்றில் ஈடுபட்டவர்களோடு கைகுலுக்குவது எம்மாதிரியான அன்பு? செங்கோலை அவமதிப்பது எம்மாதிரியான அன்பு? சொந்த நாட்டின் நாடாளுமன்றத் திறப்பு விழாவை புறக்கணிப்பது எம்மாதிரியான அன்பு? தி கேரளா ஸ்டோரி என்ற படம் வெளியானபோது வாயைமூடிக் கொண்டிருந்தது எம்மாதிரியான அன்பு? இந்தியாவை திட்டுபவர்களோடு கைகுலுக்குவது எம்மாதிரியான அன்பு? இவையெல்லாம் எந்த மாதிரியான அன்பு?

இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்களா? - பாஜகவை இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என பிரச்சாரம் செய்யப்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே மோடி அரசு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வகுப்பிற்கும், ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒவ்வொரு தேவைக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதே அரசாங்கத்தின் முன்னுரிமை. முஸ்லீம் சமூகத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில், முஸ்லிம்களுக்குக் கிடைத்த நிதி பலன் ரூ.12,000 கோடி மட்டுமே. கடந்த ஒன்பது ஆண்டுகளில், மோடி அரசாங்கம் ரூ.31,450 கோடி பட்ஜெட் கொடுத்துள்ளது.

மோடி அரசின் முன்னுரிமை பற்றிய உண்மைகளை புள்ளி விவரங்களே கூறுகின்றன. காங்கிரஸ் தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவின் ஜனநாயகத்தை பழிக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் அவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். அதிகாரப் பசியில், நாட்டின் ஜனநாயக அமைப்பை தாக்குகிறார்கள்" என தெரிவித்தார்.

பின்னணி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது அமெரிக்க பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக கடந்த மாதம் 30-ம் தேதி கலிபோர்னியாவில் நடைபெற்ற அன்புக்குத் தடை என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். பாஜக வெறுப்பை பரப்புவதாகவும், காங்கிரஸ் அன்பை பரப்புவதாகவும் அவர் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், ராகுல் காந்திக்கு பதில் அளிக்கும் வகையில் ஸ்மிருதி இரானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x