‘பிப்பர்ஜாய்’ அதிதீவிரப் புயலாக வலுவடைந்து வடக்கு நோக்கி நகரும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: பிப்பர்ஜாய் புயல் படிப்படியாக அதிதீவிரமடைந்து வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் திங்கள்கிழமை மாலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது செவ்வாய்க்கிழமை காலை வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. பின்னர் இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. அந்தப் புயல் புதன்கிழமை மேலும் வலுவடைந்து தீவிரப் புயலாக மாறியது. இந்த நிலையில் அப்புயல் வியாழக்கிழமை அதிதீவிர புயலாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பிப்பர்ஜாய் காலை 05:30 மணி அளவில் கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் கோவாவில் இருந்து மேற்கு - தென்மேற்கே சுமார் 860 கிலோமீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 910 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இந்தப் புயல் அடுத்த 48 மணிநேரத்தில் படிப்படியாக அதிதீவிரமடைந்து வடக்கு, வடமேற்கு நோக்கி நகரும். இதனால் புயல் பாதிப்பு இருக்கும் அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும், கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றிருப்பவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in