Published : 08 Jun 2023 07:13 AM
Last Updated : 08 Jun 2023 07:13 AM

தெருநாய் பிரச்சினை தொடர்பான கூட்டத்தில் வீடியோ எடுத்த பெண்ணிடம் செல்போன் பிடுங்க முயன்ற முன்னாள் பாஜக எம்.பி.

விஜய் கோயல்

புதுடெல்லி: தெருநாய் பிரச்சினைகள் தொடர்பான கூட்டத்தில் வீடியோ எடுத்த பெண்ணிடம் செல்போனை பிடுங்க முன்னாள் பாஜக எம்.பி. விஜய் கோயல் முயன்றுள்ளார். இந்நிலையில் தெரு நாய்களுக்கு உணவளிக்கக் கூடாது என்று விஜய் கோயல் கூறிய கருத்துக்கு எதிராக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பாஜக முன்னாள் எம்.பி.யான விஜய் கோயல் டெல்லியில் வசித்து வருகிறார். இவர் வடக்கு டெல்லியில் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு வருகிறார். இந்நிலையில் வடக்கு டெல்லியின் மாடல் டவுன் பகுதியிலுள்ள பூங்காவில் தெருநாய்களுக்கு உணவளிக்கும் பிரச்சினை தொடர்பான ஆலோசனை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்த விஜய் கோயல் குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

தெருநாய்களுக்கு உணவளித்தல் தொடர்பாகவும், தெருநாய்கள் பொதுமக்களை கடித்து வருவதாகவும் பலர் புகார் தெரிவித்தனர். அப்போது விஜய் கோயலை கூட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

இதைப் பார்த்த விஜய் கோயல், ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே, அந்த போனை பறிக்க முயன்றுள்ளார். ஆனால், அவர் அந்த பெண்ணை அறைந்து, அத்துமீறி நடந்துகொண்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த குற்றசாட்டை அவர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து விஜய் கோயல் கூறும்போது, ‘‘தெருநாய்கள் பிரச்சினை தொடர்பாக விவாதித்துக் கொண்டிருந்தோம். கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் அதை வீடியோவாக எடுத்தார். அப்போது ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டு அவரது போனை வாங்க முயற்சி செய்தேன். ஆனால் நான் அந்தப் பெண்ணைத் தாக்குவது போன்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. போனில் வீடியோவைப் பதிவு செய்வதை நிறுத்துங்கள் என்று கூறியவாறே, எனது நாற்காலியில் இருந்து எழுந்து நின்றேன்" என்றார்.

இந்நிலையில் மாடல் டவுன் போலீஸ் நிலையத்தில் விஜய் கோயல் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

அதில், தெரு நாய்களுக்கு உணவளிக்கக் கூடாது என்று கோயல் கூறியதாகவும், தேவையென்றால் அந்த தெருநாய்களை பொதுமக்கள் தங்களது வீட்டுக்கு கொண்டு சென்று உணவளிக்கலாம் என்று கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x