

55 வயதான அண்டை வீட்டுக்காரரால் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி, தன் கைக்குழந்தையை கவனிப்பதற்காக பள்ளிப் படிப்பைக் கைவிட்டுள்ளார்.
இவருக்குக் கடந்த வாரம் வாஷியில் உள்ள மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்துப் பேசிய சிறுமி, ''என்னுடைய குழந்தையை நான் பார்த்துக்கொள்ள விரும்புகிறேன். அதனால் என்னால் பள்ளிக்குச் செல்ல முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.
ராய்கட் மாவட்டத்தில் உள்ள பெர்லா கிராமத்துக்கு அருகில் உள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுமி ஜில்லா பரிஷத் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் அண்டை வீட்டுக்காரர் அவரைப் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். 55 வயதான அவர், அச்சிறுமி இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் சிறுமியின் பெற்றோரைக் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு ஆளான அவருக்கு, மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்த பிறகுதான் 6 மாத கர்ப்பம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து கவலை கொண்ட பெற்றோர், ''இனி கிராமத்தில் உள்ள எல்லோருக்கும் என் மகளின் கர்ப்பம் குறித்துத் தெரியவரும். இனி இவளை யாரும் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்'' என்று கவலை தெரிவித்தனர்.
உடனடியாக குற்றவாளியின் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். குழந்தை உருவாகி 6 மாதங்கள் ஆகிவிட்டதால், கருச்சிதைவை மேற்கொள்வது அபாயகரமாக அமையும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் குழந்தையைப் பெற்றெடுக்க முடிவு செய்யப்பட்டது.
சிறுமிக்கு 1.2 கிலோ எடையுடன் குழந்தை பிறந்தது. மருத்துவர்கள் இக்குழந்தையை தத்துக் கொடுக்க அறிவுறுத்தினர்.
ஆனால் அதை ஏற்க மறுத்த சிறுமியின் பெற்றோர், ''சிறுமியை யாரும் திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை எனில், அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகி, சிறுமியைக் கவனித்துக் கொள்ளும்'' என்று தெரிவித்தனர்.
இதுகுறித்துப் பேசிய மருத்துவர்கள், டீனேஜ் கர்ப்பத்தின் காரணமாக தாய், சேய் இருவருமே மோசமாக பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய பாலியல் பலாத்காரங்கள் தடுக்கப்பட வேண்டும் என்று கவலை தெரிவித்தனர்.