Published : 07 Jun 2023 07:20 PM
Last Updated : 07 Jun 2023 07:20 PM

“ஜூன் 15 வரை அரசு அவகாசம் கேட்டதால் போராட்டம் நிறுத்திவைப்பு” - மல்யுத்த வீராங்கனைகள்

கோப்புப்படம்

புதுடெல்லி: மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான போலீஸ் விசாரணையை முடிக்க ஜூன் 15-ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளது என்றும், விசாரணை முடியும் வரை போராட்டத்தை ஒத்திவைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளோம் என்றும் முன்னணி மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் செவ்வாய்க்கிழமை இரவு "மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்சினை தொடர்பாக அவர்களுடன் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்" என்று ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று டெல்லியில் உள்ள அமைச்சரின் இல்லத்துக்கு மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் புதன்கிழமை சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பங்கஜ் புனியா, "நாங்கள் சில விஷயங்கள் குறித்து விவாதித்தோம். பிரிஜ் பூஷன் மீதான போலீஸாரின் விசாரணை ஜூன் 15-ம் தேதிக்குள் முடிவடையும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். விசாரணை முடியவடையும் வரை போராட்டம் நடத்த வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். நாங்கள், எங்கள் மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதற்கு அமைச்சர் ஒப்புக் கொண்டார். ஜூன் 15-ம் தேதிக்குள் விசாரணை முடிவைடையும் என்று அரசு உறுதியளித்திருக்கிறது. அதுவரை எங்களின் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. 15-ம் தேதிக்கு பிறகு
எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், எங்களின் போராட்டம் மீண்டும் தொடரும்" என்று அவர் தெரிவித்தார்.

மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர், "மல்யுத்த வீரர்களுடன் நான் 6 மணி நேரம் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினேன். ஜூன் 15-ம் தேதிக்குள் விசாரணை முடிக்கப்படும், அதன் பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மல்யுத்த கூட்டமைப்புக்கான தேர்தல் ஜூன் 30ம் தேதி நடத்தப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மல்யுத்த வீரர்கள் வீராங்கனைகள் சந்தித்தனர். இரவு 11 மணிக்கு மேல் சுமார் 1 மணி நேரம் அந்த சந்திப்பு நடந்தது. சாக்‌ஷி மாலிக், சங்கீதா போகத், சத்யவர்த் காடியான் மற்றும் வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் உள்துறை அமைச்சரை சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து விளையாட்டுத் துறை அமைச்சர் வீராங்கனைகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். மத்திய அமைச்சர் அனுராக் தாக்குரின் அழைப்பின் பேரில், மல்யுத்த வீராங்கனைகள் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் முன்வைத்த 5 நிபந்தனைகள்:

  • மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலை வெளிப்படையாக நடத்த வேண்டும்.
  • மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
  • தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மல்யுத்த கூட்டமைப்பில் பிரிஜ் பூஷன் சிங்கின் குடும்பத்தினர் யாரும் இடம்பெறக் கூடாது.
  • கடந்த 28ம் தேதி நடந்த போராட்டத்தை அடுத்து தங்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.

இந்த 5 கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீதான போலீஸ் விசாரணை ஜூன் 15-ம் தேதிக்குள் நிறைவடையும் என்று உறுதியளித்துள்ள அமைச்சர், பிரிஜ் பூஷன் கைது செய்யப்படுவாரா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x