பாஜக கூட்டணியில் மீண்டும் சிரோமணி அகாலி தளம்?

பாஜக கூட்டணியில் மீண்டும் சிரோமணி அகாலி தளம்?
Updated on
2 min read

புதுடெல்லி: பஞ்சாபின் சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) மீண்டும் பாஜக கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது. அமிர்தசரஸ் பொற்கோயிலில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்’ நடவடிக்கை இக்கட்சி, காங்கிரஸ் கூட்டணியில் சேர தடையாகி விட்டது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த 1997 முதல் நீண்டகால உறுப்பினராக எஸ்ஏடி இடம்பெற்றிருந்தது. பஞ்சாப் மாநிலக் கட்சியான எஸ்ஏடி, பாஜக ஆதரவுடன் அம்மாநிலத்தில் ஆட்சியிலும் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2020 செப்டம்பரில் இக்கட்சி பாஜகவிடமிருந்து விலகியது. பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் இதற்கு காரணமானது. அப்போது எஸ்ஏடி சார்பில் மத்திய அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து இக்கட்சி மத்திய அரசுக்கு எதிரான முடிவுகளை எடுத்து வந்தது. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் சேர எஸ்ஏடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சியில் அமிர்தசரஸ் பொற்கோயிலில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்’ நினைவு நாளான நேற்று கூட்டணி தொடர்பாக எஸ்ஏடி இறுதி முடிவு எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

இதுகுறித்து எஸ்ஏடி மூத்த தலைவர் மஹேஷிந்தர்சிங் கிரிவால் கூறும்போது, “ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை காரணமாக எங்களால் காங்கிரஸுடன் கூட்டணி சேர முடியாது. கூட்டணிக் கட்சிக்கு பாஜக உரிய மரியாதை அளிக்க முன்வந்தால் அதன் கூட்டணியில் மீண்டும் இணைய முயற்சிப்போம். ஏனென்றால் அரசியலில் எதுவும் சாத்தியம்” என்றார்.

பஞ்சாபை தனிநாடாகப் பிரிக்கக் கோரும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோயில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பொற்கோயிலில் புகுந்து பிரிவினைவாதிகள் மீது தாக்குதல் நடத்த, கடந்த 1984-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்டார். ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்’ என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கை சீக்கியர்கள் இடையே பெரும் துயர சம்பவமாக பார்க்கப்படுகிறது.

இரு கட்சிகளை சமாளிக்க...: மேலும் பாஜகவுடன் மீண்டும் இணைந்தால் பஞ்சாபில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டையும் எளிதில் சமாளிக்கலாம் எனவும் எஸ்ஏடி கருதுகிறது.

எஸ்ஏடி-யின் இந்த முடிவால் 2024 மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு பலன் கிடைக்கும் என பாஜகவும் உற்சாகம் அடைந்துள்ளது.

பாஜகவுடன் மீண்டும் நாயுடு: ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் இக்கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகியது.

தற்போது இந்த கட்சியும் பாஜகவுடன் நெருக்கம் பாராட்டி வருகிறது. பாஜக கூட்டணியில் சந்திரபாபு இணைந்தால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பாஜகவுக்கு பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்து சந்திரபாபு பிரிந்தாலும் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் தேர்தல்கள் மற்றும் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்தது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in