

புதுடெல்லி: லிசர்ஜிக் ஆசிட் டைஎத்திலமைடு (எல்எஸ்டி) என்ற போதைப் பொருள் காகிதத்தை மிக அதிக அளவில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
எல்எஸ்டி போதை மருந்தை ஒரு கும்பல் நெதர்லாந்து மற்றும் போலந்தில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. இந்த கும்பலை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்து, ஸ்டாம்ப் அளவிலான காகிதம் போல் இருக்கும் 15,000 எல்எஸ்டி போதை மருந்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இவற்றின் சந்தை மதிப்பு ரூ.10.5 கோடி. கடந்த 20 ஆண்டுகளில், ஒரே சோதனையில் மிகப்பெரிய அளவில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப் பொருள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்எஸ்டி போதை மருந்தை விற்கும் கும்பல் இன்ஸ்டாகிராம் மூலம் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்துள்ளனர். இதற்கான பணம் கிரிப்டோகரன்சி மூலம் செலுத்தப்பட்டுள்ளது. எல்எஸ்டி போதை மருந்து விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை, நாட்டின் பல நகரங்களில் இருந்து போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 15,000 பிளாட் (ஸ்டாம்ப் வடிவிலான போதை மருந்து காகிதம்) பறிமுதல் செய்யப்பட்டன.