

மும்பை: மும்பையின் சன்படா பகுதியைச் சேர்ந்த தேஜஸ் பாட்டீல் (30) வர்த்தகம் செய்து வருகிறார். கடந்த 3-ம் தேதி தூங்கிக் கொண்டிருந்த தேஜஸ் கழுத்தில் அவரது சகோதரர் கத்தியால் வெட்டி உள்ளார். ஆனால் அந்த கத்தியை எடுக்காமல் அவர் தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தேஜஸ் அந்தக் கத்தியை தனது கழுத்தில் இருந்து எடுக்க முயற்சிக்காமல் இருசக்கர வாகனம் மூலம் 1 கி.மீ.தொலைவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், 4 மணி நேர அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அந்தக் கத்தியை லாவகமாக கழுத்திலிருந்து அகற்றி உள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்டிருந்த ரத்தக் குழாய்களை சரிசெய்துள்ளனர். நல்லவேளையாக மூளைக்கு ரத்தத்தைஎடுத்துச் செல்லும் குழாய்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து தேஜஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துக் கொண்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் கடந்த 5-ம் தேதி பொது வார்டுக்கு மாற்றப் பட்டார். இதனிடையே, கத்தியால் தாக்கப்பட்டதும் உடனடியாக மருத்துவமனைக்கு வர முடிவு செய்த தேஜஸை மருத்துவர்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.
குடும்பப் பிரச்சினை காரண மாக தேஜஸை அவரது சகோதரர் மோனிஷ் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.