

படிதார் சமூகத் தலைவர் ஹர்திக் படேலுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவை விஸ்நகர் அமர்வு நீதிமன்றம் ரத்து செய்தத்து.
முன்னதாக, படிதார் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி ஹர்திக் படேல் தலைமையில் கடந்த 2015-ம் ஆண்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. அப்போது விஸ்நகர் தொகுதி பாஜக எம்எல்ஏ ரிஷிகேஷ் படேலின் அலுவலகம் சூறையாடப்பட்டது.
இது தொடர்பாக ஹர்திக் படேல் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விஸ்நகர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கில் ஹர்திக் படேல் உள்ளிட்ட 7 பேரும் ஜாமீன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஹர்திக் படேல் நேற்று இரண்டாவது முறையாக ஆஜராகத் தவறினார். இதையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவை நீதிபதி வி.பி.அகர்வால் பிறப்பித்தார்.
இந்நிலையில், ஹர்திக் படேல் இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும், எதிர்காலத்தில் வழக்கு விசாரணைகளின்போது நேரில் ஆஜராவதாகத் தெரிவித்தார். இதனையடுத்து, அவர் மீதான ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவை விஸ்நகர் அமர்வு நீதிமன்றம் ரத்து செய்தத்து.