

விதிமுறைகள் மற்றும் தலைமை வழக்கறிஞர் கடிதம் ஆகியவற்றை பரிசீலனை செய்த பிறகு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விவகாரத்தில் இன்னும் 4 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “நான் அனைத்து விதிமுறைகளையும், தலைமை வழக்கறிஞர் கடிதம் ஆகியவற்றை பரிசீலனை செய்வேன், எது அனுமதிக்கப்படத் தகுதியுடையது என்பதை நான் பார்த்தாகவேண்டும், இதில் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. விதிமுறைகளின் படி என்ன செய்யவேண்டுமோ அதன் படி 4 நாட்களில் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்படும்.
நிறைய தருணங்களில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இருந்ததில்லை. 1969ஆம் ஆண்டு எதிர்க்கட்சித்தலைவர் பதவி இருந்தது. 1980 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லை.
இந்த முறையும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான போதிய எண்ணிக்கை இல்லை... ஆகவே பார்ப்போம்” என்றார் அவர்.
தலைமை வழக்கறிஞர் ஏ,ஜி.முகுல் எழுதிய கடிதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் தகுதி பெறவில்லை, மேலும் போதுமான எம்.பி.க்கள் இல்லாத கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் தகுதி வழங்கியதற்கான முந்தைய உதாரணங்களும் இல்லை என்று கூறியிருந்தார்.