

பிஹார் மாநிலம் கயை மாவட்ட ஆட்சியர் சஞ்சய் குமார் அகர்வால் மக்கள் குறைகேட்புக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, பன்கேபஜார் ஒன்றியம் தும்ரி பகுதியைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர் அனிதா, ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.
தனது வீட்டுக்கு அருகிலுள்ள பள்ளிக்கு இடமாறுதல் செய்து கொடுக்க வேண்டும் என அவர் அம்மனுவில் கோரியிருந்தார். ஆட்சியர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அந்த ஆசிரியரின் பொது அறிவைச் சோதித்துப் பார்க்க எண்ணி சில கேள்விகளை எழுதி, அவற்றுக் பதிலளிக்கும்படி கேட்டார்.
ஆசிரியை எழுதிய பதிலை வாங்கிப் படித்தவருக்கு தலைசு ற்றி மயக்கம் வராததுதான் குறை. குடியரசுத் தலைவர் யார் என்ற கேள்விக்கு பிரதீபா பாட்டீல் எனப் பதிலளித்திருந்தார். பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. வரும் 25-ம் தேதியுடன் பிரணாப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைய வுள்ளன. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை, பிஹாரின் ஆளுநர் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதில்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர், அந்த ஆசிரியரின் உண்மையான கல்வித் தகுதி பற்றி விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் சஞ்சய் குமார் கூறும்போது, “இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இதுபோன்ற மோசமான அறிவுடைய ஆசிரியர் எப்படி, பள்ளியில் குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவார்” எனக் கேள்வியெழுப்பினார்.
அனிதாவுக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட் டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். அவரின் கல்விச் சான்றுகள் போலியானவை எனத் தெரியவந்தால் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிஹாரில் ஆசிரியர் ஒருவர் இதுபோன்ற சிக்கலில் மாட்டுவது இது முதல்முறை அல்ல. சில ஆண்டுகளுக்கு முன் சமஸ்திபூர் மாவட்டத்தில் பெண் ஆசிரியர் ஒருவர், ஓராண்டுக்கு 360 நாள்கள் என்றும், பாட்னா இந்தியாவின் தலைநகரம் என்றும் பாடம் நடத்தியது உள்ளூர் தொலைக்காட்சி சேனலால் படம்பிடிக்கப்பட்டு வெளியானது.
மேலும், ஜனவரியை, ஜுனுவரி என்றும், ஆப்பிளை, அபிள் என்றும் சாட்டர்டேவை, ஷட்டர்தே என்றும், எஜுகேசன் என்பதை, அடுகேசன் என்றும் அந்த ஆசிரியர் உச்சரித்தும் ஒளிபரப்பானது.
பிஹார் கல்வி அமைச்சர் பிரிஷென் படேல் கடந்த வாரம் சட்டசபையில் பேசும்போது, “ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள், போலியான சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளியில் ஆசிரியாகச் சேர்ந்துள்ளனர்.
அவர்களை நீக்குவது மட்டுமின்றி, சிறைக்கும் அனுப்பு வோம்” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.