Published : 06 Jun 2023 03:00 PM
Last Updated : 06 Jun 2023 03:00 PM

கர்நாடக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை - பசுக்களுடன் பாஜக போராட்டம்

பெங்களுரு: பசுக்களை ஏன் கொல்லக் கூடாது என கர்நாடக அமைச்சர் ஒருவர் கூறியதை அடுத்து, அவருக்கு எதிராக பசுக்களுடன் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக அமைச்சரான வெங்கடேஷ், எருமை மாடுகளை கொல்லலாம் என்றால், பசுக்களை மட்டும் ஏன் கொல்லக் கூடாது என கடந்த சனிக்கிழமை கேள்வி எழுப்பி இருந்தார். அவரது இந்த கருத்துக்கு பசு ஆர்வலர்களும் பாஜகவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூருவில் நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்களத்துக்கு பசுக்களை அழைத்து வந்த அவர்கள், பசுக்களுக்கு மாலை அணிவித்து, அவற்றின் நெற்றியில் பொட்டு வைத்து, அவற்றுக்கு பழம் உள்ளிட்ட உணவுகளைக் கொடுத்தனர். மேலும், அமைச்சர் வெங்கடேஷுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய பாஜகவினர், அவர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

முதல்வர் பேட்டி: இதையடுத்து இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, "முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த பசுவதை தடைச் சட்டம் தெளிவற்றதாக உள்ளது. வரக்கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிப்போம்" என தெரிவித்தார்.

காங்கிரஸ் கொடுத்த முக்கிய 5 தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சி இன்னும் நிறைவேற்றவில்லை என பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குப் பதில் அளித்த சித்தராமையா, "பாஜக ஒரு மக்கள் விரோத கட்சி. அவர்கள் ஆட்சியில் இருந்தபோது மாநிலத்தை கொள்ளையடித்துவிட்டார்கள். இந்திரா உணவக திட்டம், சவுபாக்கியா திட்டம், மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை பாஜக தடுத்தது. மக்களுக்கு 10 மணி நேரம் இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி ஆகியவற்றை மாநில அரசு வழங்கும்" என கூறினார்.

தேர்தல் வாக்குறுதிகள்: நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 5 வாக்குறுதிகளை அளித்தது. 1. கிரஹ ஜோதி என்ற திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். 2. கிரஹ லக்ஷ்மி எனும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம்தோறும் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். 3. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு நபருக்கும் மாதம்தோறும் 10 கிலோ அரசி இலவசமாக வழங்கப்படும். 4. யுவ நிதி எனும் திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம்தோறும் ரூ. 3 ஆயிரமும், டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500-ம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். 5. உசித பயணம் எனும் திட்டத்தின் கீழ் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் கொண்டு வரப்படும்.

எவையெவை எப்போது? - “மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கும் திட்டம் ஜூன் 11-ம் தேதி முதல் அமலுக்கு வரும். கர்நாடகாவுக்குள் சாதி, மத, மொழி பேதமில்லாமல் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம். மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகளில் இந்தச் சலுகையைப் பெற இயலாது. அதேபோல குளிர்சாதன‌, சொகுசுப் பேருந்துகளிலும் பயணிக்க முடியாது. 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வரும் ஜூலை 1-ம் தேதி தொடங்கப்படும். இந்த திட்டம் அனைத்து வீடுகளுக்கும் பொருந்தும். இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் திட்டம் வரும் ஆக‌ஸ்ட் 15-ம் தேதி ஆரம்பமாகும்.

குடும்ப அட்டைதார‌ர்களுக்கு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். ஜூலை 15-ம் தேதிமுதல், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1500 வழங்கப்படும். 2022 - 2023 காலத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இதில் பயன்பெறலாம். இந்த திட்டத்தில் 24 மாதங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.55 ஆயிரம் கோடி செலவாகும்” என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x