Published : 02 Oct 2017 06:38 AM
Last Updated : 02 Oct 2017 06:38 AM

ஏழுமலையான் கோயிலில் சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு: 9 நாளில் 6.21 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்: 26.55 லட்சம் லட்டுகள் விற்பனை; ரூ.18.7 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் நேற்று நிறைவு பெற்றது. கடந்த 9 நாட்களில் 6.21 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

விழாவின் நிறைவு நாளான நேற்று காலையில் கோயில் குளத்தில் சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு, தலைமை பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா, இறகு பந்து வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் அர்ச்சகர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சக்கர ஸ்நான நிகழ்ச்சியை தொடர்ந்து நேற்று மாலையில் தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டிருந்த பிரம்மோற்சவ கொடி இறக்கும் நிகழ்ச்சி ஆகம சாஸ்திரங் களின்படி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடந்து முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 9 நாட்களில் 6,21,705 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். கடந்த 9 நாட்களில் 26,55,080 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் உண்டியலில் ரூ.18.7 கோடியை காணிக்கையாக செலுத்தினர். இவ்விழாவின்போது ஒரு பக்தர் ரூ.8.36 கோடி மதிப்பிலான தங்க காசு மாலையை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தினார்.

ரூ.300 சிறப்பு கட்டண தரிசனம் கட்டுப்படுத்தப்பட்டு, சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டன. திருமலையில் 7,000 வாகனங்களும் அலிபிரி மலையடிவாரத்தில் 2,500 வாகனங்களும் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருப்பதி-திருமலை இடையே தினமும் 4,200 முறை ஆந்திர அரசு பஸ் இயக்கப்பட்டது. கருட சேவை நாளில் 550 பஸ்கள் மூலம் 2 மணி நேரத்தில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் பயணம் செய்தனர். மேலும், திருமலையில் இலவச பஸ் 24 மணி நேரமும் இயக்கப்பட்டது. இதன்மூலம் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் பயனடைந்தனர்.

திருமலையில் உள்ள கல்யாண கட்டா 24 மணி நேரமும் இயக்கப்பட்டது. இதன்மூலம் கடந்த 8 நாட்களில் 3,06,071 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

புகைப்பட கண்காட்சி, மலர் கண்காட்சி, மணல் சிற்பம் போன்றவை பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. தினமும் 4,000 தங்கும் அறைகள் சாமானிய பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1,500 கலைஞர்கள் வாகன சேவைகளில் பங்கேற்று நடனமாடினர். பக்தர்களுக்கு தினமும் இலவசமாக சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு போன்றவை வழங்கப்பட்டது. இதில் கருட சேவையன்று சேவை முடிந்தும் அதிகாலை 2 மணி வரை உணவு பரிமாறப்பட்டது.

மாட வீதிகளில் 1.8 லட்சம் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன. 252 குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. இலவச மோர், தண்ணீர், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. மொத்தத்தில் இந்த பிரம்மோற்சவத்தில் மலைப்பாதைகளில் ஒரு விபத்தோ அல்லது வாகன பழுது சம்பவமோ நடைபெறவில்லை. இவ்வாறு தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x