

பெங்களூரு: கர்நாடக தேர்தலில் தாவணகெரே மாவட்டம் ஜாகலூர் (தனி - எஸ்.டி) தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர் பி.தேவேந்திரப்பா (63). பழங்குடியின வகுப்பை சேர்ந்த இவர் ஜாகலூரில் உள்ள அமர பாரதி வித்ய கேந்திரா பள்ளியில் 1983ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை அலுவலக உதவியாளராக பணியாற்றினார்.
இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மருத்துவராகவும், இளைய மகன் ஐஆர்எஸ் அதிகாரியாகவும் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் 2013-ல்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தேவேந்திரப்பா, அரசியல் ஆர்வத்தின் காரணமாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இணைந்து 2018 தேர்தலில்போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
2022ல் மஜதவில் இருந்து விலகிய, தேவேந்திரப்பா காங்கிரஸில் இணைந்தார். கடந்த மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் ராம்சந்திராவை 874 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தேர்தலில் வென்ற பின்னர் தேவேந்திரப்பா, தான் உதவியாளராக பணியாற்றிய அமர பாரதி வித்ய கேந்திரா பள்ளிக்கு அண்மையில் சென்றார். உதவியாளராக இருந்தபோது பள்ளியின் ஆசிரியர், மாணவர் வருகை பதிவேடுகள் ஒழுங்கு செய்தல், தாளாளர் மேஜை சுத்தம் செய்தல், பெல் அடித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டார். தாளாளர் அறைக்கு வெளியே போடப்பட்டிருந்த உதவியாளரின் இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்தார். மேலும் பள்ளியின் தாழ்வாரத்தை துடைப்பத்தால் கூட்டி சுத்தம் செய்தார். இந்த நிகழ்வின் புகைப்படங்கள், வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.