சசிகலாவுக்கு 5 நாள் பரோல்: இன்று சென்னை வருகிறார்

சசிகலாவுக்கு 5 நாள் பரோல்: இன்று சென்னை வருகிறார்
Updated on
1 min read

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவரை சந்திப்பதற்காக அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை  5 நாள் பரோல் வழங்கியது. இதனையடுத்து, அவர் இன்று மாலை விமானம் மூலம் சென்னைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சசிகலா தனது கணவரை சந்திக்க செல்வதற்கு 15 நாட்கள் பரோல் கேட்டு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் முதன்மை கண்காணிப்பாளர் சோமசேகரிடம் நேற்று முன் தினம் விண்ணப்பித்தார்.

சசிகலாவுக்கு பரோல் வழங்கலாமா என அனுமதி கோரி கர்நாடக சிறைத்துறை கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேக்ரிக், உள்துறை, சட்ட அமைச்சகத்துக்கு சோமசேகர் கடிதம் அனுப்பினார். மேலும் சசிகலா சென்னை வருவதால் ஏதேனும் சட்ட சிக்கல் ஏற்படுமா? அவருக்கு ஆபத்து உள்ளதா? போதிய பாதுகாப்பு வழங்கப்படுமா போன்ற விஷயங்களில் தடையில்லா சான்று வழங்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு கடிதம் அனுப்பினார். அதன்பேரில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் நேற்று ( தடையில்லா சான்றிதழின் நகலை மின்னஞ்சலில் சிறைத் துறைக்கு அனுப்பி வைத்தார்.

இதே போல கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, சசிகலா பரோலில் செல்ல அனுமதி அளித்தார். மாநில உள்துறை செயலர் பசவராஜ், சிறைத்துறையின் விதிமுறையின்படி சசிகலாவுக்கு பரோல் வழங்கலாம் என பரப்பன அக்ரஹாரா சிறைக்கு ஒப்புதல் கடிதத்தை அனுப்பினார்.

சசிகலாவுக்கு பரோல் வழங்குவதற்கு சட்டத்துறை இன்று (அக்.6) ஒப்புதல் அளித்த நிலையில், அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள் விதிக்கப்பட்டனவா?

சசிகலா ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in