

புவனேஷ்வர்: ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் ஹவுரா - புரி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது..
முன்னதாக 51 மணி நேரத்திற்குப் பின்னர் நேற்று பின்னிரவு பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் சேவையை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காக பிரார்த்தனை செய்தார்.
விபத்து நடந்தபின்னர் மிகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையுடன் ரயில்கள் அனைத்தும் குறைத்த வேகத்திலேயே இயக்கப்படுகின்றன.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் பகுதியில் கடந்த 2-ம் தேதி தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீதுஷாலிமார் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்மோதியது. அப்போது, எதிர்திசையில் வந்த பெங்களூரூ–ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும்விபத்தில் சிக்கியது.
இந்த பயங்கர விபத்தில் 288 பேர் உயிரிழந்ததாக நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட சில சடலங்கள் 2 முறை கணக்கிடப்பட்டதால், எண்ணிக்கையில் தவறு நடந்துள்ளது. ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஒடிசா தலைமைச் செயலர் பிரதீப் ஜெனா நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில் ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் 51 மணி நேரத்திற்குப் பின்னர் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தார். அப்போது அவர் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காக பிரார்த்தனை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "ரயில் விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளும்படி பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். அதன்படி மீட்புப் பணிகள் முடிந்தவுடனேயே மறுசீரமைப்புப் பணிகளை முடுக்கிவிட்டோம். ஒரு பெரிய குழு மிகக் கடுமையாக உழைத்து சேதமடைந்த ரயில்வே பாதையை துல்லியமாக சீரமைத்துள்ளது. இப்போது பயணிகள் ரயில் இயக்கப்படும் இரண்டு தண்டவாளங்களும் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன் பின்னரே சேவை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது" என்றார்.
முன்னதாக நேற்று அமைச்சர் வைஷ்ணவ், "இன்டர்லாக்கிங் பிரச்சினையால் ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணமான கிரிமினல்கள் கண்டறியப்படுவார்கள்" என்று கூறியிருந்தார்.