

புதுடெல்லி: வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் கூடுதல் பிடித்தம் செய்ய விரும்பும் ஊழியர்கள், தங்கள் நிறுவனம் வழியாக கூட்டு உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று வருங்கால வைப்புநிதி அலுவலகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்குப் பிறகு பணப்பலன்கள் மற்றும் ஓய்வுதியம் வழங்கும் நோக்கில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) செயல்பட்டு வருகிறது. வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ், ஊழியரின் அடிப்படை ஊதியத்திலிருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதேபோல், நிறுவனமும் அவரது வருங்கால வைப்பு நிதி கணக்கில் 12 சதவீதம் செலுத்தும். இதில் நிறுவனம் செலுத்தும் 12 சதவீதத்திலிருந்து 8.33 சதவீத தொகை ஊழியரின் ஓய்வூதிய கணக்குக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
2014 செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, ஓய்வூதியம் பிடித்தம் செய்வதற்கான அடிப்படை ஊதிய வரம்பு ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது.
ஊழியர்கள் தங்களின் அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் இருப்பின் அவர்கள் விரும்பினால் அதற்குண்டான கூடுதல் வருங்கால வைப்பு நிதியை செலுத்த தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஊழியர்கள் கூட்டு உறுதிமொழி படிவத்தை தங்கள் நிறுவனம் வழியாக இபிஎஃப்ஓ அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.