

புதுடெல்லி; ரயில் விபத்து எவ்வாறு நடந்தது என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ரயில்வே நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமான விளக்கத்தை அளித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே வாரியத்தின் உறுப்பினர் ஜெயா வர்மா கூறியதாவது:
ஒடிசாவின் பாஹாநாகா பஜார் பகுதியில் இணைப்பு தண்டவாளத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. கொல்கத்தாவில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த ஷாலிமார்–சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது.
அதே நேரத்தில், பெங்களூருவில் இருந்து மேற்கு வங்கத்தின் ஹவுராவுக்கு செல்லும் பெங்களூரூ–ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் அப்பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு, பெங்களூரு ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி 2 பெட்டிகள் மீது மோதின. இதனால் அந்த ரயிலின் பெட்டிகளும் தடம் புரண்டன. விபத்து நடந்தபோது, சென்னை கோரமண்டல் ரயில் 128 கி.மீ. வேகத்திலும்,ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 125 கி.மீ. வேகத்திலும் சென்று கொண்டிருந்தன.
இணைப்பு தண்டவாளத்தில் செல்ல பச்சை விளக்கு சிக்னல் கொடுக்கப்பட்டதாலேயே அந்த தண்டவாளத்துக்கு மாறியதாக கோரமண்டல் ரயிலின் ஓட்டுநர் கூறியுள்ளார். அவர் மீது எந்த தவறும் இல்லை.
இன்டர்லாக்கிங் தொழில்நுட்பத்தில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை. அதேநேரம், தண்டவாளத்தை ஒட்டி யாராவது பள்ளம்தோண்டியிருந்தால், பாயின்ட் இயந்திரம்–கட்டுப்பாட்டு பேனல்இடையிலான வயர் இணைப்பு அறுபட்டிருக்கலாம். ஏதாவதுஇயந்திரம் மூலம் தண்டவாளம்அருகே பணி மேற்கொண்டிருந் தாலும் வயர்கள் அறுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
அமெரிக்க அதிபர் பைடன் இரங்கல்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “இந்தியாவில் ஏற்பட்ட ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்தியாவின் வேதனையை அமெரிக்காவும் பகிர்ந்து கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸும் ஒடிசா ரயில் விபத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.