Published : 04 Jun 2023 03:41 PM
Last Updated : 04 Jun 2023 03:41 PM

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது எப்படி? - இந்திய ரயில்வே துறை விளக்கம்

ஜெயா வர்மா

புதுடெல்லி: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது எப்படி?.. என்ற விளக்கத்தை இந்திய ரயில்வே துறை அளித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே வாரியத்தின் செயல்பாடு மற்றும் வணிக மேம்பாட்டு உறுப்பினர் ஜெயா வர்மா கூறும்போது, “விபத்து ஏற்பட்ட பஹனகா பகுதியில் 4 ரயில் வழித் தடங்கள் உள்ளன. இதில் இரண்டு பிரதானமான ரயில் வழித்தடங்கள். மற்ற இரண்டும் லூப் தடங்கள்..

ரயிலை நிறுத்த வேண்டும் என்றால், லூப் தடத்தில்தான் நிறுத்துவோம். விபத்தின் போது, ​​இரண்டு விரைவு ரயில்களும் ரயில் நிலையத்தின் வழியாக வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருந்தன. ரயில் நிலையங்களைப் பொறுத்தவரை , லூப் லைன்கள் முக்கிய வழித்தடங்கள் நடுவிலும், முக்கிய வழித்தடங்களின் இருபுறமும் இருக்கும்.

விபத்தின்போது, ​​நிற்க வேண்டிய இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வழிவிட இரண்டு ரயில்கள் நிறுத்தப்பட்டன. அப்போது லூப் லைனில் சரக்கு ரயில் காத்திருந்தது. கோரமண்டல் மற்றும் பெங்களூரு - ஹவுரா விரைவு ரயிலுக்கான இரண்டு முக்கிய பாதைகள் அகற்றப்பட்டு, எல்லாம் தயாராக இருந்தது, சிக்னலும் பச்சை அளிக்கப்பட்டது.பச்சை சமிக்ஞை என்பது ஓட்டுநருக்கு முன்னோக்கிச் செல்லும் பாதை தெளிவாக உள்ளது அவர் அதிகபட்ச வேகத்தைப் பயன்படுத்தலாம் என்பதையே குறிக்கும்.

அந்த இடத்தில் கோரமண்டலுக்கான அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 130 கி.மீ. அங்கு கோரமண்டல் ரயில் மணிக்கு 128 கிமீ வேகத்தில் சென்றிருக்கிறது. அதே நேரத்தில் பெங்களூரு - ஹவுரா அனுமதிக்கப்பட்ட வேக வரம்பிற்குள் மணிக்கு 126 கிமீ வேகத்தில் சென்றிருக்கிறது. ரயில்கள் அதிவேகத்தில் செல்லவில்லை. சிக்னல் பச்சை நிறத்தில் இருந்ததாலேயே ரயில்கள் சென்றுள்ளன.

முதற்கட்ட அறிக்கையில் சில சிக்னல் கோளாறுகளால் விபத்து ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை நான் அதைப் பற்றி கருத்து தெரிவிக்க மாட்டேன். ஆனால் மூன்று ரயில்கள் மோதியதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை . இதில் கோரமண்டல் ரயில் மட்டுமே விபத்தை எதிர் கொண்டது, கோரமண்டல் ரயில்தான் லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. ரயில் அதன் அதிகபட்ச வேகத்தில் இருந்ததால் இதன் தாக்கம் மிகப்பெரியதாக மாறியுள்ளது. சரக்கு ரயில் கனமானது மற்றும் இரும்பு தாது கொண்டது. இதனால் சரக்கு ரயிலுக்கு ஒன்றும் ஆகவில்லை. இந்த மோதலின் முழு பாதிப்பு கோரமண்டல் ரயிலுக்குத்தான் ஏற்பட்டது. கோரமண்டலின் பெட்டிகள் எல்ஹெச்பியால் ( Linke Hofmann Busch coach- ரயில் பெட்டிகளை தயாரிக்கும் ஜெர்மன் நிறுவனம்) ஆனவை. இவை மிகவும் பாதுகாப்பானவை. ஒன்றோடு ஒன்று மோதி விழாது. ஆனால் இந்த விபத்தில் முழு பாதிப்பும் கோரமண்டல் ரயில் பக்கம் வந்ததால், எந்த தொழில்நுட்பத்தினாலும் அதனைக் காப்பாற்ற முடியவில்லை.

கோரமண்டல் ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள், யஷ்வந்த்பூர் ஹவுரா கடந்து செல்லும் மற்ற முக்கிய பாதையில் விழுந்ததால் யஷ்வந்த்பூர் ரயிலின் கடைசி சில பெட்டிகளும் பாதிப்படைந்தன.” என்றார்.

யில் விபத்து: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் (ஜூன் 2) பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 7 மணி அளவில் ஒடிசாவின் பாலசோர் - பத்ரக் ரயில் நிலையங்கள் இடையே பாஹாநாகா பஜார் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பிரதான தண்டவாளத்தில் இருந்து இணைப்பு தண்டவாளத்துக்கு ரயில் மாறியுள்ளது. இணைப்பு தண்டவாளத்தில் ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர வேகத்தில் மோதியது. இந்த ரயில் விபத்தில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர். 1000 பேர் காயமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x