

உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
கேரள உயர் நீதிமன்றத்தின் வைரவிழா கொண்டாட்டங்களை தொடங்கி வைத்து பேசிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் நகல்கள் 24 அல்லது 36 மணி நேரத்துக்குள் வழங்கப்பட வேண்டும்.
ஆங்கிலத்தில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன, “ஆனால் பல்வேறு மொழிகளைக் கொண்டது நம் நாடு. தீர்ப்பின் முக்கியமான நுட்பமான விவரங்கள் ஆங்கிலத்தில் இருந்தால் மனுதாரருக்குப் புரியாமல் போய்விடும் வாய்ப்புள்ளது, இந்நிலையில் தீர்ப்பின் விவரங்களை அறிய வழக்கறிஞரையோ, பிறரையோ நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. இது காலத்தையும் செலவையும் அதிகரிப்பதாகும்.
நீதியை மக்களிடத்தில் எடுத்துச் செல்வது மட்டுமல்ல, வழக்குக்குச் சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியும் மொழியில் அது அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.
சமூகத்தில் பின் தங்கியவர்களும், நலிவுற்றோரும் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர். எனவே விரைவாக வழக்கை முடிக்க நாம் வழிவகைகளைக் காண வேண்டும். அவசர சூழ்நிலையில்தான் ஒத்திப் போடுதல் முடிவு எடுக்கப்பட வேண்டும், ஒத்திப் போடுதல் வழக்கு நடைமுறையை தாமதப்படுத்துவதாக இருத்தல் கூடாது.” என்றார்.
விழாவில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், முதல்வர் பினரயி விஜயன், கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நவிநிதி பிரசாத் சிங், கேரள மாநில ஆளுநர் பி.சதாசிவம் ஆகியோரும் உரையாற்றினர்.