

பாலசோர்: ஒடிசாவில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 2 பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் மோதிய பயங்கர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. 1,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் (ஜூன் 2) பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 7 மணி அளவில் ஒடிசாவின் பாலசோர் - பத்ரக் ரயில் நிலையங்கள் இடையே பாஹாநாகா பஜார் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பிரதான தண்டவாளத்தில் இருந்து இணைப்பு தண்டவாளத்துக்கு ரயில் மாறியுள்ளது. இணைப்பு தண்டவாளத்தில் ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்குரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகளை துளைத்து 3-வது பெட்டியின் மீது பயணிகள் ரயிலின் இன்ஜின் ஏறியது. மோதிய வேகத்தில், கோரமண்டல் ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டு, 3-வது தண்டவாளத்தின் குறுக்கே நின்றன.
அதே நேரம், பெங்களூரூவில் இருந்து ஹவுரா செல்லும் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்திசையில் அதே பகுதியில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.
அப்போது, தண்டவாளத்தின் குறுக்கே நின்றிருந்த கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது பெங்களூரு - ஹவுரா ரயில் பயங்கரமாக மோதிதடம் புரண்டது. இந்த விபத்தில் கோரமண்டல் ரயிலின் 3 பெட்டிகள், ஹவுரா ரயிலின் 2 பெட்டிகள் முற்றிலுமாக உருக்குலைந்தன.
இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. ராணுவம், விமானப் படை, தேசிய, மாநில பேரிடர் மீட்பு படைகள், தீயணைப்பு படை என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து வந்துமீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு 200 ஆம்புலன்ஸ்கள், 100-க்கும் மேற்பட்ட பஸ்கள், வாகனங்கள் மூலம் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், சோரோ ஆகிய நகரங்களில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் கோரமண்டல் ரயில் அதிக சேதம் அடைந்துள்ளது. ஹவுரா ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக பாதிப்பின்றி தப்பினர்.
பலரது நிலைமை கவலைக்கிடம்
இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 650-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தென்கிழக்கு ரயில்வே நேற்று தெரிவித்துள்ளது. படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு 500-ஐ தாண்டும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 42 ஆண்டுகளில் ஏற்பட்ட பெரிய ரயில் விபத்துகளில் இது ஒன்றாக இருக்கும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, ரயில் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்றுஅவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மீட்பு, நிவாரண, மருத்துவ உதவிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி சிறப்பு விமானம்மூலம் ஒடிசாவின் கலைகுண்டாவில் உள்ள விமானப் படை தளத்துக்கு சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், விபத்து நேரிட்ட ஒடிசாவின் பாஹாநாகா பஜார் பகுதிக்கு வந்து, ரயில்கள் விபத்துக்குள்ளான பகுதியை ஆய்வு செய்தார். விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
அங்கிருந்தபடியே, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய கேபினட் செயலர் ஆகியோரிடம் செல்போனில் பேசிய பிரதமர் மோடி, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை, நிவாரண உதவிகளை வழங்குவது குறித்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். பின்னர், பாலசோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், பிரதமர் கூறியபோது,‘‘ரயில் விபத்து மிகுந்த வேதனையளிக்கிறது. காயமடைந்தவர்களுக்கு உயர்தரமான சிகிச்சை அளிக்கப்படும். விபத்துக்கான காரணம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு இழைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். விபத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. இதுபோன்ற விபத்துஇனிமேல் நேராத வகையில், உரியபாதுகாப்பு நடவடிக்கைகளை ரயில்வே அதிகாரிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். ஒடிசா அரசும், ரயில்வே நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு மீட்புபணியில் ஈடுபட்டுள்ளன. உள்ளூர் மக்களும் மீட்பு பணிக்கு உதவியுள்ளனர். ஏராளமானோர் ரத்ததானம் செய்துள்ளனர். அனைவரையும் பாராட்டுகிறேன்’’ என்றார்.
உயர்நிலை விசாரணை
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது, ‘‘விபத்து குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையரும் தனியாக விசாரணை நடத்துவார். அவர் அறிக்கை அளித்த பிறகே, விபத்துக்கான உண்மை காரணம் தெரியவரும்’’ என்றார். ‘விபத்தில்உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலாரூ.2 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் விபத்து பகுதிக்கு வந்து பார்வையிட்டனர்.
முதல்வர் நவீன் பட்நாயக் கூறும்போது, ஒடிசா முழுவதும் ஜூன் 3-ம்தேதி ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தெரிவித்தார். மம்தா பானர்ஜி கூறும்போது, ‘‘சதிகாரணமா என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டும். விபத்து தடுப்புசாதனம் பொருத்தப்பட்டிருந்தால் அதிக உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும்’’ என்றார்.