

பாலசோர்: ஒடிசா ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்ய ஏராளமானோர் முன்வந்துள்ளனர்.
இதுகுறித்து ஒடிசா அதிகாரிகள் கூறும்போது, “விபத்து நடந்த பகுதிக்கு 45 நடமாடும் மருத்துவக் குழுவும் சுமார் 200 ஆம்புலன்ஸ்களும் அனுப்பி வைக்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக 75 மருத்துவர்களும் திரட்டப்பட்டுள்ளனர்.
ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரத்த தானம் அளிக்க ஏராளமானோர் முன்வந்துள்ளனர். இவர்கள் பாலசோர் மருத்துவமனைகளில் காத்திருக்கின்றனர். இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதனை கண்காணிக்கும் பணியில் தடயவியல் மருத்துவ நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றனர்.
உள்ளூரைச் சேர்ந்த கணேஷ் என்பவர் கூறும்போது, “விபத்து நிகழ்ந்தபோது நான் அருகில் இருந்தேன். 200 முதல் 300 பேரை நாங்கள் காப்பாற்றினோம்” என்றார்.
இந்திய ராணுவத்தை சேர்ந்த கர்னல் எஸ்.கே.தத்தா கூறும்போது, “மீட்புப் பணியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். கொல்கத்தாவில் இருந்து கூடுதல் வீரர்களும் வருகின்றனர்” என்றார்.
ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா கூறும்போது, “விபத்தில் இறந்தவர்களுக்கான பிரேதப் பரிசோதனை ஏற்கெனவே தொடங்கி விட்டது. இறந்தவர்களின் உடல்கள், அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்கும் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகின்றன” என்றார்.
ரயில் விபத்தை தொடர்ந்து ஒடிசா அரசு நேற்று துக்க தினமாக அறிவித்தது.