

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் ஷாலிமரிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் வந்தபோது, சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது. இந்நிலையில், எதிரே வந்துகொண்டிருந்த பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் தடம்புரண்ட கிடந்த கோரமண்டல் ரயில் மீது மோதியது. இதனால், ஹவுரா எக்ஸ்பிரஸும் தடம்புரண்டது.
இந்நிகழ்வு, 14 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு வெள்ளிக்கிழமை இரவு ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான சம்பவத்தை நினைவுக்கு கொண்டுவந்துள்ளது. 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம் தேதி, சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஒடிசாவில் ஜாஜ்பூர் மாவட்டத்தில், இரவு 7.50 மணி அளவில் தடம் புரண்டது. அதிக வேகத்தில் வந்துகொண்டிருந்த அந்த இரயில், வேறு தடத்துக்கு மாறுகையில், விபத்து நடத்தது. அந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மிகப் பெரிய விபத்தில் சிக்கி உள்ளது.