Last Updated : 15 Oct, 2017 10:45 AM

 

Published : 15 Oct 2017 10:45 AM
Last Updated : 15 Oct 2017 10:45 AM

போர்களில் வென்றால் மட்டும் போதாது

உலகில் இரண்டுவிதமான மாமன்னர்கள் உண்டு என்று வரலாறு நமக்கு போதிக்கிறது. முதல் ரக மன்னர்கள் போரில் வெற்றி பெற்று பிரதேசத்தைக் கைப்பற்றிய பிறகு, நிர்வாகத்தில் கவனம் செலுத்தி மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து மகிழ்ச்சியாக வாழ வழி செய்கின்றனர்; இரண்டாவது ரக மன்னர்கள் தொடர்ந்து போர்களையே செய்துகொண்டு பிரதேசங்களை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றுவதில் மட்டுமே அக்கறை செலுத்துகின்றனர். அக்பர், ஔரங்கசீப் ஆகிய இருவரும் இந்த இரண்டுவிதமான மன்னர் களுக்குச் சிறந்த உதாரணம். ஆனால் மாமன்னர் அசோகரை உதாரணம் காட்டுவது பொருத்தமானது, ஆபத்தில்லாதது. அவரே தன்னுடைய வாழ்க்கையின் முதல் பாகத்தில் பெரும் போர்களில் ஈடுபட்டு பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொண்டே இருந்தார். கலிங்கத்துப் போருக்குப் பிறகு ஏராளமான உயிர்ப் பலிகள் அவருடைய கண்ணைத் திறந்ததால் இனி போர் செய்யக்கூடாது என்று முடிவெடுத்து மக்களுக்கு நன்மைகளைச் செய்து அழியாப் புகழ் பெற்றார். நவீன நிர்வாகங் களுக்கு அடித்தளமிட்டார், ஆயிரம் ஆண்டு களுக்குப் பின்வரும் மன்னர்கள் பின்பற்றும்விதமாகச் செயல்பட்டார். .

ராணுவ ரீதியிலான படையெடுப்புகள் காலம் எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டது. இப்போதைய தலைவர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற பொதுத் தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். தனித்தும் கூட்டணி அமைத்தும் ராணுவ உத்திக்கு நிகரான தேர்தல் உத்திகளை வகுக்கின்றனர். 2014-ல் நரேந்திர மோடி பெற்ற அரசியல் வெற்றி, வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒன்று. நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மோடியைவிட அதிகத் தொகுதிகளில் மக்களவை பொதுத் தேர்தலில் வென்றுள்ளனர். ஆட்சியிலிருக்கும் அரசை, (உத்தரபிரதேசத்தைச் சேராத) வெளியாள் ஒருவர் இவ்வளவு திட்டவட்டமாகத் தோற்கடித்தது 2014-ல் தான். இப்போது அவருடைய பதவிக்காலத்தின் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேல் முடிந்த நிலையில் அவர் எப்படிப்பட்ட ஆட்சியாளர் என்று எடைபோடுவது சரியாக இருக்கும்.

நேர்மையாக ஒப்புக்கொண்டால், மோடியும் அவருடைய தளபதிகளும் 2014-ல் தொடங்கிய ஆட்சியைக் கைப்பற்றும் போரை இன்னமும் நிறுத்திக்கொள்ளவில்லை; எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்குத் தயாராக அணிவகுப்பதில் கவனமாக இருக்கின்றனர். கட்சிக்கு செல்வாக்கே இல்லாத தொலைதூரப் பகுதிகளில்கூட காலூன்றிவிட வேண்டும் என்று கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2019 மக்களவை பொதுத் தேர்தல் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது.

வெற்றி பெற்ற எந்தத் தலைவரும் கிடைத்த வெற்றியே போதுமானது என்று திருப்திப்பட்டு அமர்ந்துவிடுவதில்லை. ஆட்சிக்கு வந்த புதிதில் மக்களிடம் ஆதரவு அதிகமாக இருக்கும். போகப்போக அது தேயும். மிகவும் கடினமான முடிவுகளை மக்களுடைய ஆதரவு இருக்கும் ஆட்சியின் தொடக்க காலத்திலேயே எடுத்துவிட வேண்டும். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்திலேயே கவனம் செலுத்தியதால் மோடி அரசு தனக்குக் கிடைத்த வாய்ப்புகளையும் நேரத்தையும் வீணடித்துவிட்டது. கடினமான பொருளாதார முடிவுகளை ஆட்சியின் பிற்பகுதியில் எடுத்திருக்கிறது. அதனால்தான் இப்போது நெருக்கடி.

2014-ல் பாஜக-மோடி பிரச்சாரத்துக்கு மூன்று முனைகள் இருந்தன. 1. இனி நல்ல காலம் பிறக்கும் (அச்சே தின்), 2. நாட்டின் பாதுகாப்புக்கு வலுவான கொள்கை உருவாக்கப்படும், 3. ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பவை அவை. ஊழலில் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய்கள் வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருந்தாலும் அவற்றைக் கண்டுபிடித்து இந்தியா கொண்டுவந்து ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஊழல் செய்தவர்கள் எவ்வளவு செல்வாக்கானவர்களாக இருந்தாலும் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

மோடி அரசு இதில் ஆர்வம் இழந்தது. 42 மாதங்களுக்குப் பிறகு, ஊழல் ஒழிப்பில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுவிடவில்லை என்பதே உண்மை. வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றதும் இல்லாமல், அவரைக் கைது செய்து மீட்டு வர முடியாதபடிக்கு அரசின் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறார்.

1,000, 500 முகமதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டது துணிச்சலான ஒரு நடவடிக்கைதான் என்றாலும் அதனால் கறுப்புப் பணத்தைப் பெருமளவுக்குக் வெளிக்கொண்டுவர முடியவில்லை. டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு அது ஓரளவுக்கே உதவியிருக்கிறது. அதே சமயம் அமைப்புசாராத தொழில்துறையும் கிராமப்புறப் பொருளாதாரமும் படுமோசமாக சீர்குலைந்து ஏராளமானோரின் வேலைவாய்ப்பையும் பொருளாதார நிலையையும் சீர்குலைத்தது. அடுத்து அமல்படுத்திய பொது சரக்கு-சேவை வரி சீர்திருத்தத்துக்கு இது பெருந்தீங்கை ஏற்படுத்தியது.

அரசியல் விரிவாக்கத்திலேயே கவனம் செலுத்தியதால் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டது. புல்லட் ரயில் திட்டம் நல்ல உதாரணம். புல்லட் ரயில் ஓடுவதற்கான அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்க ஐந்து ஆண்டுகள் பிடிக்கும் என்றால், ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே அதைத் தொடங்கியிருந்தால் ஐந்து ஆண்டுகள் முடிவில் அதை மக்கள் பார்த்து ஆதரவை மேலும் அதிகரித்திருப்பர்.

அரசு வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சிறிய வங்கிகளை இணைப்பது, வாராக்கடன் தொகை சுமையைக் குறைப்பது, மும்பை மாநகர கடற்கரையோரம் சாலை அமைப்பது போன்ற பெரிய அடித்தளக் கட்டமைப்பு திட்டங்கள், புதிய விமான நிலையம் போன்றவற்றுக்கு இன்னமும் ஒரு செங்கல்கூட நாட்டப்படவில்லை. இந்தியாவில் தயாரிப்போம் திட்டமும் முடங்கியிருக்கிறது. ராணுவத்துக்கு ரஃபேல் நிறுவனத்திடமிருந்து 2 ஸ்குவாட்ரன் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ததைத் தவிர பெரிய கொள்முதல் ஏதும் நடக்கவில்லை.

2014-ல் கிடைத்த வெற்றியும் அடுத்தடுத்து கிடைத்த வெற்றிகளும் பாஜக தலைவர்களுக்கு மயக்கத்தைத் தந்தன. அடுத்த மக்களவை பொதுத் தேர்தலிலும் நமக்குத்தான் வெற்றி என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அரசியலில் சோம்பலுக்கு மன்னிப்பே கிடையாது. மோடி அரசு தன்னுடைய தவறான உத்தியால்தான் இப்போது வேகமிழந்து நிற்கிறது.

தமிழில்: ஜூரி

சேகர் குப்தா, ‘தி பிரிண்ட்’ தலைவர்

முதன்மை ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x