Published : 03 Jun 2023 01:02 PM
Last Updated : 03 Jun 2023 01:02 PM

ஒடிசா ரயில் விபத்து பலி 288 ஆக அதிகரிப்பு, 800+ காயம்: மீட்புப் பணிகள் நிறைவு; சீரமைப்பு பணிகள் தீவிரம்

புவனேஸ்வர்: தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி பெரும் விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு நிகழ்ந்தது. ரயில் விபத்துப் பகுதியில் ரயில்வே துறை மேற்கொண்டுவந்த மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தற்போது சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளதாகவும், 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழித்தடத்தில் ரயில்கள் மோதலைத் தடுக்கும் அமைப்பான 'கவாச்' இல்லை என்பது பேசுபொருள் ஆகியுள்ளது. வாசிக்க > ரயில் விபத்துகளை தடுக்க உதவக் கூடிய ‘கவாச்’ தொழில்நுட்பம் என்றால் என்ன? - ஒரு தெளிவுப் பார்வை

நிவாரணத் தொகைக்காக விண்ணப்பிப்போருக்காக பாலசோர், சோரோ, பஹானாகா ஆகிய இடங்களில் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. விபத்து நடந்த மார்க்கத்தில் இதுவரை 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 39 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், “ஒடிசா மாநில அமைச்சர் அடானு சப்யசாசி நாயக், “எங்களின் முதல் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே. மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைக்குத் தேவையான அனைத்தும் தயாராக இருக்க வேண்டுமென முதல்வர் தெரிவித்துள்ளார்" என்றார்.

விபத்து நடந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் "இது ஒரு துயர்மிகு விபத்து. ரயில்வே, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு மிகச் சிறந்த உயர் சிகிச்சை தர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ரயில் பாதுகாப்பு ஆணையரும் சுதந்திரமான விசாரணை மேற்கொள்வார்" என்று கூறினார்.

நிகழ்விடத்தில் மம்தா பானர்ஜி: சம்பவ இடத்துக்கு நேரில் வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளைப் பார்வையிட்டார். மேலும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட இருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மாநில அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும். நாங்கள் நேற்று 40 ஆம்புலன்ஸ்களை அனுப்பினோம். இன்று 70 ஆம்புலன்ஸ்களையும் 40 மருத்துவர்களையும் அனுப்பி உள்ளோம்" என தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு: முன்னதாக, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். | அதன் விவரம் > ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சிறப்பு ரயில்கள்: ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்லவும், அங்கு இருப்பவர்கள் சென்னை வரவும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் சிறு காயம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள், காலை 8.45க்கு புவனேஷ்வர் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை காலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தவிர்த்து சென்னையில் இருந்து உறவினர்கள் செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் இன்று இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு புவனேஷ்வர் வரை இயக்கப்படுகிறது.

தமிழக அமைச்சர் தகவல்: விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 127 பேருடனும், ஹவுரா ரயிலில் பயணித்த 5 பேருடனும் பேசி உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். ஒடிசா ரயில் விபத்தை ஒட்டி சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "ரயில் விபத்து தொடர்பாக முழு விவரங்கள் இன்று மாலைக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 அமைச்சர்கள் கொண்ட குழுவினர் ஒடிசா சென்றுள்ளனர். 2 மாவட்ட வருவாய் அலுவலர், 2 துணை ஆட்சியர், 4 தாசில்தார் கொண்ட அதிகாரிகள் குழுவும் ஒடிசா சென்றுள்ளது. இதுவரை 8 பேர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டுள்ளனர். நாங்கள் கோரமண்டல் ரயிலில் பயணித்த 127 பேருடனும், ஹவுரா விரைவு ரயிலில் பயணித்த 5 பேருடனும் பேசி உள்ளோம். அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக தமிழகம் மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

ஒடிசா முதல்வர் ஆறுதல்: விபத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "இது மிகவும் துயரான விபத்து. உள்ளூர் மக்களுக்கும் குழுக்களுக்கும் நான் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள்தான் இரவு முழுவதும் பணியாற்றி மீட்புப் பணிகளை மேற்கொண்டார்கள். ரயில்பாதுகாப்புக்கு எப்போதுமே முதல் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். காயமடைந்த மக்கள் பாலாசோர் மற்றும் கட்டாக் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

தமிழக அமைச்சர்கள் குழு: தமிழக அரசின் அமைச்சர்கள் குழு ரயில் விபத்து நடந்த ஒடிசாவின் பாலசோர் மற்றும் புவனேஷ்வரில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் விவரங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். | வாசிக்க > ஒடிசா சென்றடைந்த தமிழக அமைச்சர்கள் குழு: விவரம் திரட்டும் பணி தீவிரம்

ரயில்வே எனது குழந்தை போல: “தற்போதெல்லாம் ரயில்வே ப்டஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. ரயில்வே துறை என்னுடைய குழந்தை போன்றது. ரயில்வே குடும்பத்தைச் சேர்ந்தவள் என்ற முறையில் நான் என்னுடைய ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருக்கிறேன்" என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திரிணமூல் கடும் விமர்சனம்: திரிணமூல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலேட் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரயில் விபத்தை தவிர்க்கும் கவாச் தொழில்நுட்பம் ஏன் கோரமண்டல் பாதையில் இல்லை? ஏன் மொத்த இந்திய ரயில் பாதைகளில் 2% மட்டுமே கவாச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது.. மத்மா பானர்ஜி (2011 -2012) ரயில்வேதுறை அமைச்சராக இருந்தபோது Train Collision Avoidance System (ரயில் மோதுவதை தவிர்க்கும் அமைப்பு) என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் வழக்கம்போல் அதிகாரத்துக்கு வந்ததும் கவாச் என்று பாஜக அந்த திட்டத்துக்கு பெயர் மாற்றி அதற்கான பெருமையை ஏற்றுக் கொண்டது. ஆனால் 2019 ஆம் ஆண்டுவரை இந்த தொழில்நுட்பத்தில் எந்தவித முன்னேற்றத்தையும் பாஜக அரசு செய்யவில்லை. 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் மூன்று நிறுவனங்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

ரத்த தானம்: விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் கொடுப்பதற்காக ஏராளமானோர் மருத்துவமனைகளுக்கு வந்து ரத்த தானம் செய்துள்ளனர். | பார்க்க >
ரத்த தானம் செய்ய வரிசைகட்டிய இளைஞர்கள்

தவறு எங்கே? - இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் குழு முதற்கட்ட விசாரணை மேற்கொண்டது. அதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முதலில் சிக்னல் கொடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகு திரும்பப் பெறப்பட்டதாகவும் இதன் காரணமாகவே விபத்து நேரிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சிக்னல் கொடுக்கப்பட்டதை அடுத்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இணைப்பு தடத்தில் சென்று சரக்கு வாகனத்தின் மீது மோதி தடம் புரண்டுள்ளது. தடம் புரண்ட ரயிலின் பெட்டிகள் பிரதான ரயில் தடத்தின் மீது விழுந்துள்ளன. அந்தத் தடத்தில் வந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், பிரதான தடத்தின் மீது இருந்த ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது" என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரதமர் மோடி உறுதி: பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவுக்குச் சென்று பாலசோர் ரயில் விபத்துக்குப் பிறகு நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். ரயில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிரதமர், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறினார்.

ரயில்களில் பயணம் செய்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மாபெரும் சோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் கூறினார். துரதிர்ஷ்டவசமான உயிர் இழப்புகள் குறித்துப் பேசுகையில், காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுடன் அரசு துணை நிற்கிறது என்றார் அவர்.

இந்த துயரச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரைவான விசாரணையை உறுதி செய்யவும், தவறு இழைத்ததாக கண்டறியப்பட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

ஒடிசா அரசு, உள்ளூர் நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இரவு முழுவதும் தொடர்ந்து மீட்பு பணிகளில் உதவுவதற்காக உழைத்ததை அவர் பாராட்டினார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக ரத்ததானம் செய்ய வந்த ஏராளமான உள்ளூர் மக்களையும் அவர் பாராட்டினார்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடரவும், ரயில் பாதைகளை விரைவாக மீட்டெடுப்பதை உறுதி செய்யவும் ரயில்வே செயல்பட்டு வருகிறது என்றார் அவர். உள்ளூர் அதிகாரிகள், பேரிடர் மீட்புப் படைகளின் பணியாளர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் உரையாடிய பிரதமர், சோகத்தைத் தணிக்க அரசு முழுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

கடந்த 20 ஆண்டு காலத்தில் நடந்த ரயில்வே விபத்துகளில் இது மிகவும் மோசமான விபத்து என்று கூறப்படுகிறது. வாசிக்க > ஒடிசா ரயில் விபத்து: 30 ஆண்டுகளில் நிகழ்ந்த 3-வது மிகப் பெரிய விபத்து

விமான நிறுவனங்களுக்கு அறிவுரை: விமான போக்குவரத்து துறை அமைச்சகம், விமான நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், “ஒடிசாவில் நிகழ்ந்துள்ள துரதிஷ்டவசமான விபத்தை காரணம் காட்டி புவனேஸ்வர் மற்றும் மாநிலத்தின் பிற விமான நிலையங்களிலிருந்து புறப்படும் விமானங்களின் கட்டணங்கள் உயர்த்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். அப்படி கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “ரயில் விபத்து சம்பவத்தினால் விமான சேவை ரத்து செய்யப்பட்டாலோ, மாற்றப்பட்டாலோ எந்தவித கூடுதல் தொகையையும் பயணிகளிடமிருந்து வசூலிக்கக் கூடாது” எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x