Published : 03 Jun 2023 05:34 AM
Last Updated : 03 Jun 2023 05:34 AM
புதுடெல்லி: 38 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம்(என்எம்சி) ரத்து செய்துள்ளது. இந்நிலையில், விளக்கம் கேட்டு மேலும், 102 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத் துவ கல்லூரிகளில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண் டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக ஆய்வு, சோத னைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே நாடு முழுவதும் 38 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் அண்மையில் ரத்து செய்தது. இதில் தமிழ்நாட்டில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி, தருமபுரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரிகளும் அடங்கும்.
இந்தக் கல்லூரிகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தாதது, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்தாதது, போதுமான பேராசிரியர்கள் பணிநியமனம் செய்யாமல் இருந்ததுஎன்பன உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளைக் காரணம் காட்டி சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 102 மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வருகை பதிவை செயல்படுத்த தவறியதற்காக இக்கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மருத்துவக் கல்லூரிகளில் கட்டாய பயோமெட்ரிக் வருகைக்கான விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்தே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான விளக்கத்தை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள், என்எம்சிக்கு அளிக்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வருகையை குறிப்பிடுவதில்லை: இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, “தேசிய மருத்துவ ஆணையம் நடத்திய ஆய்வில் கல்லூரிகளின் பெரும்பாலான ஆசிரிய உறுப்பினர்கள், டீன், முதல்வர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர்கள்கூட பயோமெட்ரிக் முறையில் தங்கள் வருகையை குறிப்பிடுவதில்லை” என்று தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT