

எதிர்கட்சியினர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. சனி, ஞாயிறு விடுமுறை, ரம்ஜான் விடுமுறைக்கு பின்னர் நாடாளுமன்றம் இன்று கூடியது.
மாநிலங்களவையில் உறுப்பினர்கள், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வீட்டில் ஒட்டு கேட்பு உகரணம் பொருத்தப்பட்டது தொடர்பாக சர்ச்சையை கிளப்பினர்.
கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு இது தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், " நிதின் கட்கரி வீட்டில் ஒட்டுகேட்பு கருவி பொருத்தப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானவை. இதை, கட்கரியே பல முறை தெரிவித்துவிட்டார்" என்றார்.
ஆனால், அமைச்சர் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் அமளிடைத் தொடர்ந்து மாநிலங்களவையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்து அவைத்தலைவர் உத்தரவிட்டார். மீண்டும் அவை கூடிய போதும் அமளி நீடித்ததால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதே போல, யுபிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.