

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட் டத்தில், பலாத்காரம் செய்ய முயன்றவரை பெண், அச்சாணி யால் குத்திக் கொலை செய்தார்.
குப்பம் தொகுதி, குடுபல்லி மண்டலம், அத்திசத்தி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மஞ்சுநாத் (30). இவரது மனைவி ரேணுகா (24). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் கிராமத்துக்கு ஒதுக்கு புறமாக சுமார் 2 கி.மீ. தொலைவில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை மஞ்சுநாத் தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டில் ரேணுகா தனியாக இருந்துள்ளார். இதை அறிந்த அதே கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணப்பா (55) என்பவர், இரவு 8 மணியளவில், ரேணுகாவின் வீட்டுக்கு வந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சமையல் அறையில் இருந்த மிளகாய் பொடியை வீசி கிருஷ்ணப்பாவை விரட்டியுள்ளார்.
எனினும் ஒரு மணி நேரம் கழித்து கிருஷ்ணப்பா மீண்டும் ரேணுகாவின் வீட்டுக்கு வந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த ரேணுகா மத்து கட்டையால் கிருஷ்ணப்பாவின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். பின்னர் வீட்டுக்கு முன் இருந்த தங்கள் மாட்டு வண்டியின் அச்சாணியை கழற்றி, கிருஷ்ணப்பாவை சரமாரியாக குத்தினார்.
இதில் தப்பியோடிய கிருஷ்ணப்பா அரை கி.மீ. தூரத்தில் மயங்கி விழுந்தார். நள்ளிரவில் அவரை குப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிராம மக்கள் சேர்த்தனர்.
ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, நடந்த விஷயங்களை ரேணுகா தனது கணவரிடம் கூறிவிட்டு, குடுபல்லி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண் டுள்ளனர்.