ரஷ்யா - உக்ரைன் போரில் இந்திய அரசின் நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன்: ராகுல் காந்தி

வாஷிங்டனில் ராகுல் காந்தி
வாஷிங்டனில் ராகுல் காந்தி
Updated on
1 min read

வாஷிங்டன்: ரஷ்யா - உக்ரைன் போரில் இந்திய அரசின் நிலைப்பாட்டை தான் ஆதரிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி 6 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று வாஷிங்டனில் உள்ள தேசிய பிரஸ் க்ளப்பில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு ரஷ்யாவுடன் நல்லுறவு இருக்கிறது. சில விஷயங்களில் அவர்களை நாங்கள் சார்ந்திருக்கிறோம். அதனால் உக்ரைன் விவகாரத்தைப் பொறுத்தவரையில் இந்திய அரசின் கொள்கையுடன் நான் உடன்படுகிறேன். அனைவரின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்து இந்தியா ஒரே விஷயத்தைத்தான் வலியுறுத்தி வருகிறது. இந்தப் போரால் பக்கவாட்டு சேதம் போல் ஒட்டுமொத்த தெற்கு உலகமும் உணவு, எரிபொருள், உரத் தேவை ஆகியனவற்றில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.

அதனால் ஜனநாயக முறைப்படி ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலமே பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இதுதான் இந்திய அரசின் நிலைப்பாடு. இதில் நான் உடன்படுகிறேன்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

சீனாவின் ஜனநாயக விரோதப் போக்கை எதிர்கொள்ள இந்த உலகம் தவறிவிட்டது. சீனாவை எதிர்கொள்ள இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உற்பத்தித் துறையில் இந்தியா - அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும் எம்.பி. தகுதிநீக்கம் பற்றிப் பேசிய அவர், "நான் எம்.பி. பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவேன் என்று கற்பனை கூட செய்ததில்லை. அவதூறு வழக்கில் தகுதிநீக்கம் செய்யப்படலாம் என்ற நடைமுறையில் அதிகபட்ச தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட முதல் ஆள் நான் தான். இதுபோன்ற நடவடிக்கைகள் எல்லாம் சாத்தியம் என்பதைக் கூட நான் யோசித்ததில்லை.

ஆனால் இந்த தகுதிநீக்கம் எனக்கு நாடாளுமன்றத்திற்குள் இருப்பதைவிட மிகப் பெரிய வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in