

புதுடெல்லி: டெல்லியில் ரோஹிணி பகுதியில் கடந்த 30-ம் தேதி 16 வயது சிறுமியை ஒரு இளைஞர் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்தார்.
கொலை செய்த நபர் உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தைச் சேர்ந்த சாஹில் கான் (20) என விசாரணையில் தெரியவந்தது. ஏ.சி.மெக்கானிக்கான சாஹிலை தீவிர தேடுதலுக்குப் பிறகு போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய சாஹில், போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்றும் இருண்ட வாழ்க்கையை விரும்பி உள்ளார் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சாஹில் கூச்ச சுபாவம் கொண்டவர், தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பார் என அவருடைய குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் தெரிவித்துள்ளனர். ஆனால், சாஹில் கானின் சமூக ஊடக பக்கங்களைப் பார்த்தால் அதற்கு நேர்மாறாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அவர் புகை பிடிப்பது போலவும் நண்பர்களுடன் மது குடிப்பது போலவும் புகைப்படம், வீடியோக்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
இன்ஸ்டாகிராம் பக்கம் அவருடைய வாழ்க்கையை எடுத்துரைப்பதாக உள்ளது. இவர் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலாவின் ரசிகராக இருந்துள்ளார். மேலும் அவர் பதிவேற்றம் செய்துள்ள வீடியோ பதிவில், “தீவிரவாதத்தை உருவாக்காத வரை இந்த உலகம் உன்னை அமைதியாக வாழ விடாது” என கூறுகிறார்.