கர்நாடகத்தை விட்டு நித்யானந்தா வெளியேற வேண்டும்: கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

கர்நாடகத்தை விட்டு நித்யானந்தா வெளியேற வேண்டும்: கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா கர்நாடகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி, பெங்களூர் அருகே பிடதியில் உள்ள அவரது ஆசிரமம் முன், கன்னட அமைப்பினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெங்களூர் அருகே, ராம்நகர் மாவட்டம், பிடதியில் 'தியான பீடம்' என்ற பெயரில் நித்யானந்தாவின் ஆசிரமம் உள்ளது.

இங்கு சனிக்கிழமை குரு பூர்ணிமா சிறப்பு பூஜை நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. பெங்களூர் - மைசூர் நெடுஞ்சாலையில் சுமார் 25 கி.மீ. தூரம் வைக்கப்பட்டிருந்த பிளெக்ஸ் பேனர்களை கன்னட அமைப்பினர் வெள்ளிக்கிழமை தீயிட்டு கொளுத்தினர்.

கன்னட அமைப்புகளின் எதிர்ப்பை மீறி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பிடதி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா பூஜை தொடங்கியது. இதில் கர்நாடகம் மட்டுமன்றி, அண்டை மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.

இதனிடையே கன்னட சலுவளி கட்சி, கன்னட நவநிர்மாண் சேனை, கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பிடதி பேருந்து நிலையத்தில் இருந்து நித்யானந்தாவின் ஆசிரமம் நோக்கி ஊர்வலமாக சென்றன‌ர். பின்னர் ஆசிரமத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அனைவரும் ஆசிரமம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். நித்யானந்தா பேனர்களை அவமரி யாதை செய்தும், தீயிட்டு கொளுத்தியும் அவர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து கன்னட சலுவளி கட்சியின் மாநில தலைவர் மது கவுடா கூறும்போது, ஆபாச வீடியோவில் சிக்கி சிறைக்குச் சென்ற போலி சாமியார் நித்யானந்தா, இந்து மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி வருகிறார்.

ஆசிரமம் நடத்துவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து பல குடும்ப பெண் களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறார். அவர் மீதுள்ள வழக்குகளை உடனடியாக விசாரித்து அவரை சிறையில் அடைக்க வேண்டும். அவரது ஆசிரமத்துக்கு கர்நாடக அரசு உடனே சீல் வைக்கவேண்டும்.

நித்யானந்தா கர்நாடகத்தை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் அவரை துரத்துவோம்” என்றார்.இந்தப் போராட்டம் காரணமாக சனிக்கிழமை மாலை பிடதியில் நடைபெற இருந்த நித்யானந்தாவின் ரத ஊர்வலத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in