

இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்வர் வீர பத்திர சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடத்தும் இம்மாநிலத்தில், எதிர்கட்சியான பாஜக, இந்த முறை ஆட்சியைக் கைபற்ற தீவிரம் காட்டி வருகிறது. தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பிரேம் குமார் துமல் அளித்த பேட்டி:
இமாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பாஜக இன்னமும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வில்லையே?
இதுபற்றி முடிவு செய்ய வேண்டியது கட்சித் தலைமை. சரியான நேரத்தில் சரியான நபரை அவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார்கள். இதனால் எங்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை.
முதல்வர் வேட்பாளரை அறிவிக்காதது தேர்தலில் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தாதா?
இதுபற்றி கட்சி தலைமை யோசித்து இருக்கும்.
இந்த தேர்தலில் பாஜக எதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்கிறது?
இமாச்சல பிரதேசதத்தில் ஊழல் ஆட்டிப் படைக்கிறது. சட்டம் - ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. மாநிலத்தின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ளது. இதுபற்றி தேர்தலில் பிரச்சாரம் செய்து வருகிறோம்.
மாநில அரசு மீது இப்போது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகிறீர்கள். மத்தியில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருக்கும் பாஜக அரசு, இமாச்சல பிரதேச அரசு மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை?
இந்த மாநிலத்தில் நடந்துள்ள ஊழல் புகார் பற்றி சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தி வருகிறது. வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் நீதிமன்ற விசாரணை தாமதமாவதால், சட்ட நடவடிக்கையில் இருந்து ஆளும் காங்கிரஸ் கட்சியினர் தப்பி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.